திருப்பூரில் அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அஇஅதிமுக கட்சியின் வேட்பாளர் அருணாச்சலம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அஇஅதிமுக கட்சியின் வேட்பாளர் அருணாச்சலம் வேட்புமனு தாக்கல் செய்தார். அஇஅதிமுக சார்பில் திருப்பூர் நாடாளுமன்ற வேட்பாளராக ஈரோடு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் அருணாச்சலம் தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அதிமுக சார்பில் இன்று வளர்மதி பாலம் அருகே உள்ள மறைந்த முதல்வர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் ஆனந்தன் முன்னிலையில் மனு தாக்கல் செய்தார்.

முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் கருப்பண்ணன், எம் எஸ் எம் ஆனந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், விஜயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குணசேகரன், சிவசாமி உட்பட அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து திருப்பூர் குமரன் சிலை மற்றும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பத்திரிக்கையாளர்கள் சந்தித்து பேசுகையில், புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் ஆசியோடு, அதிமுக பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்களின் நல்லாசியோடு திருப்பூர் நாடாளுமன்றத்திற்கு வேட்பாளர் அருணாச்சலம் தாக்கல் செய்துள்ளார்.

கொங்கு மண்டலம் என்பது அதிமுகவின் எக்கு கோட்டை என்று இந்த தேர்தல் அறிய வைக்கும், புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி ஆகியோருக்கு இப்பகுதி மக்கள் அரணாக இருந்தது அனைவரும் அறிந்ததே, வெற்றி என்பது உறுதியாகிவிட்டது என்றும், கூட்டணி வலிமையாக உள்ளது, வெற்றி பெறச் செய்யும் மக்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றி என்றும், அதிமுக வெற்றியில் எந்த ஒரு அச்சமும் கிடையாது என்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் அருணாச்சலம் பேசுகையில், தொகுதி மக்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து தருவதாகவும், மக்களோடு இணைந்து பணியாற்றுவதாக பேசினார். மாற்று வேட்பாளராக அருணாச்சலத்தின் மனைவி தீபா முன்னாள் அமைச்சர் கருப்பண்ணன் முன்னிலையில் மனு தாக்கல் செய்தார்.

Tags

Next Story