திருப்போரூர்: இறந்தவரின் உடலை வாங்க ரூ.9 லட்சம்?
போராட்டம்
செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 63. மூச்சுத்திணறல் காரணமாக, கடந்த மே 2-ம் தேதி, திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட போது, 30,000 ரூபாயை, ராஜேந்திரனின் மகன் டில்லிபாபு, 30, செலுத்தியுள்ளார்.
சிகிச்சைக்கான மற்ற செலவுகள், அவரது 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ காப்பீட்டு அட்டை வாயிலாக பெற்றுக்கொள்ளப்படும் என, மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இந்நிலையில், பல்வேறு கட்ட சிகிச்சைக்கு பின், சிகிச்சை பலனின்றி, கடந்த 27-ம் தேதி ராஜேந்திரன் உயிரிழந்தார்.
அதன் பின், தந்தையின் உடலைப் பெற டில்லிபாபு முயற்சித்த போது, காப்பீட்டு அட்டை இருந்தும் கூடுதலாக 9 லட்சம் பாக்கி தொகை உள்ளதாக கூறி, மீத தொகையை செலுத்திவிட்டு உடலை பெற்றுச் செல்லுமாறு, மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இதனால், காப்பீட்டுத் தொகையை மீறி செலவாகும் என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கவில்லை என கூறி, ராஜேந்திரன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், இதுகுறித்து தகவல் அறிந்த திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, மருத்துவமனைக்கு சென்று, மருத்துவமனை நிர்வாகிகளிடம் பேச்சு நடத்தினார். அதன்பின், காப்பீட்டு தொகைக்குள் மருத்துவ செலவுகளை முடித்துக்கொள்வதாக உடன்பாடு ஏற்பட்டு, ராஜேந்திரன் உடலை உறவினர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்தது.