ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் நெடுங்கன்னி திருக்கல்யாணம்

ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் நெடுங்கன்னி திருக்கல்யாணம்

திருக்கல்யாண வைபவம் 

மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம். நவசக்தி சுமங்கலி பூஜை, கன்னிகாதானம் செய்யப்பட்டு மாங்கல்ய தாரணம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் கிராமத்தில் வாள் நெடுங்கண்ணி உடனாகிய தான்தோன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. முற்கால சோழ மன்னர்களின் ஒருவரும் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவருமான கோச்செங்கட் சோழ மன்னனால் அமைக்கப்பட்ட மாடக் கோயில்களில் ஒன்றான இக்கோவிலில் சுவாமி தானாக தோன்றியதால் தான்தோன்றிஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

தேவாரப்பாடல் பெற்றதும் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரான சிறப்புலி நாயனார் பிறந்து வளர்ந்து வாழ்ந்து சிவபெருமானை வழிபட்டு முக்தி அடைந்த தலம் ஆகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஸ்ரீ வால்நெடுங்கண்ணி அம்மன் சிகப்பு பட்டு உடுத்தியும் ஸ்ரீ தான் தோன்றீஸ்வரர் வென்பட்டு உடுத்தி திரு ஆபரணங்களுடன் வெளிப்பிரகார மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டனர்.

பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்து சுவாமி அம்பாளின் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. சுவாமி அம்பாளுக்கு பாலால் பாதம் சுத்தம் செய்து, பட்டாடையால் துடைத்து, பச்சைபுடி சுற்றி பெண்கள் நலுங்கிட்டனர். தொடர்ந்து புனிதநீர் கடம் வைக்கப்பட்டு ஹோமம் வளர்க்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு பட்டாடை சாத்தப்பட்டது. 9 சுமங்கலி பெண்களை நவசக்தியாக பாவித்து சுமங்கலி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கன்னிகாதானம் செய்யப்பட்டு திருமாங்கல்ய தாரணம் (திருக்கல்யாணம்) நடைபெற்றது. சாமி அம்பாளுக்கு மாலை மாற்றும் உற்சவம், பூரணாகுதி செய்யப்பட்டு புனிதநீர் தெளிக்கப்பட்டு அலங்கார தீபம் உள்ளிட்ட 16 வகையான சோடச தீபாராதனையுடன் மகாதீபாரதனை செய்யப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டு தரிசனம் செய்தனர்.

Tags

Next Story