காமாட்சி அம்மன், காஞ்சரடி, கழுவடி திருக்கோவில் உற்சவ விழா

அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி கிராமத்தில் ஶ்ரீ காமாட்சி அம்மன், காஞ்சரடி, கலுவடி திருக்கோவில் உற்சவ விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி கிராமத்தில் ஶ்ரீ காமாட்சி அம்மன், காஞ்சரடி, கலுவடி திருக்கோவில் உற்சவ விழா நடைபெற்றது. 12 நாட்கள் நடந்த இந்த விழாவில் சால்வார்பட்டி அரண்மனையாரிடம் கம்பு வாங்க செல்லுதல், ஆதனூர் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று பெட்டி தூக்கி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் தினந்தோறும் மணகொண்டாறு (மரங்குளி ஆற்றுக்கு) சென்று தீர்த்தமாடி வந்து காஞ்சரடி கோவிலுக்கு முன்பாக படுகளத்தில் பட்டசாமிகள் பாடுவிழுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோன்று ஒன்பது நாட்களும் தீர்த்தமாடி வந்து படுகளத்தில் 9 சாமிகள் பாடுவிழுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து ஆதனூர் காமாட்சி அம்மன் கோவிலுக்கு பொங்கல் பானை அழைத்து வரச் செல்லுதல், கழுவடி கோவிலில் ஏழு கழுமரம் ஊன்றுதல், மேளதாளம் முழங்க வானவேடிக்கையுடன் பிரான்குண்டு கரகக்காரி அம்மன் கோவிலுக்கு செல்லுதல், முடுவார்பட்டி காமாட்சி அம்மன் கோயிலில் உச்சி பொங்கல் வைத்து சக்தி குட்டி வெட்டுதல், மஞ்சள் நீராடுதளுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த உற்சவ விழாவில் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை முடுவார்பட்டி, ஆதனூர் காமாட்சி அம்மன் கோவில் பங்காளிகள் பொருளாளர் சித்திரன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags

Next Story