கிருஸ்தவர்களுக்கு அனைத்து அங்கீகாரமும் வழங்க வேண்டும்: நீதிபதி
உயர்நீதிமன்ற மதுரை கிளை
சூசையப்பா்பட்டணத்தில் பட்டியலின கிறிஸ்தவா்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது. சிவகங்கையைச் சோ்ந்த ஆரோக்கிய சேகரன் தைனிஷ் தாக்கல் செய்த மனு:
சிவகங்கை மாவட்டம், சூசையப்பா்பட்டணம் கிராமத்தில் அமைந்துள்ள சூசையப்பா் ஆலய திருவிழாவின்போது பட்டியல் இனத்தைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் சப்பரம் தூக்குவதற்கும், உயிரிழந்த பட்டியல் இனத்தைச் சோ்ந்த கிறிஸ்தவா்களின் உடலை ஆலயத்துக்குச் சொந்தமான வண்டியில் எடுத்துச் செல்வதற்கும் அனுமதிப்பதில்லை, பங்கு பேரவையில் பட்டியலின சமூகத்தினரை உறுப்பினா்களாகச் சோ்க்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா். இந்த மனுவை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரா் கூறியது உண்மையானால் இது தீண்டாமை ஆகும். அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 17-இன் படி தீண்டாமை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், சிவகங்கை மறை மாவட்ட ஆயா் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், அங்கு தீண்டாமை பாகுபாடுகள் எதுவும் இல்லை எனக் குறிப்பிடப்பட்டது.
எனவே, சூசையப்பா்பட்டணம் பங்கு குழுவில் பட்டியலினத்தைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் இடம் பெற வேண்டும். உயிரிழந்தவா்களின் உடலை எடுத்துச் செல்லும் வண்டி ஆலயத்துக்குச் சொந்தமானதாக இருந்தாலும், அதை அனைவரும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். பட்டியலினத்தைச் சோ்ந்த கிறிஸ்தவா்களுக்கு அனைத்து அங்கீகாரமும் வழங்க வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.