ஆவின் மீது குற்றச்சாட்டு - கடை உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை
ஊட்டியில் டீக்கடைக்கு வாங்கிய ஆவின் பாலில் ஏராளமான புழுக்கள் இருந்ததாக கடை உரிமையாளர் புகார் தெரிவித்தார். இதனால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடையில் நேரில் ஆய்வு செய்தனர். நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தேநீர் கடையின் உரிமையாளர் இன்றைய தேதியிட்ட 3 அரை லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளார். பாலை காய்ச்ச பாத்திரத்தில் ஊற்றியபோது, அதில் ஏராளமான புழுக்கள் இருந்ததை கண்ட கடை உரிமையாளர் இது குறித்து உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி சம்பவ இடத்திற்கு நேரில் வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சிவராஜ் ஆவின் பாலில் இருந்த புழுக்களையும், ஆவின் பாக்கெட்டுகளையும் ஆய்வு செய்தார்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சிவராஜ் கூறியதாவது: பால் கெட்டுப் போனால் பொதுவாக பால் திரியும். இதுபோல் புழுக்கள் வந்து பார்த்ததில்லை. எனவே ஆவின் நிறுவனம் சார்பில் இதே வரிசை எண்ணில் தயாரித்து அனுப்பப்பட்ட பால் பாக்கெட்டுகளை ஆய்வுக்கு எடுத்துள்ளோம். அந்த பால் பாக்கெட்டுகளை நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள பால் ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். அடுத்த 2 வாரங்களில் ஆய்வு முடிவுகள் வந்த பின்னர் தான் பாலில் புழுக்கள் இருந்தது குறித்த விவரம் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆவின் பொது மேலாளர் ஜெயராமன் கூறுகையில், " பாலில் புழுக்கள் இருப்பதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து ஆய்வு செய்தோம். இதில் அந்தப் புழுக்கள் லார்வா வகையை சேர்ந்தது, ஈ முட்டையிடுவதால் இந்த வகை புழுக்கள் வரும். இவை ஆவின் பால் பாக்கெட்டுகளில் உருவாகாது. எனவே பாத்திரத்தில் புழுக்கள் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, ஆவின் மீது இது போன்ற குற்றச்சாட்டு சுமத்தியத்திற்கு கடை உரிமையாளர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.