குமரி பனை மேம்பாட்டு இயக்கத்துக்கு நிதி ஒதுக்கீடு
ஆட்சியர் ஸ்ரீதர்
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தோட்டக்கலை துறையின் கீழ் 2024 – 25-ஆம் ஆண்டு பனை மேம்பாட்டு இயக்கத் திட்டத்தின் கீழ் ரூ.4,03,000/- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பனை விதைகள் விநியோகம் இனத்தின் கீழ் உத்தேச இலக்கு 25,000 எண்ணத்திற்கு ரூ.75,000/- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயனாளிக்கு (தனி நபர்) அதிக பட்சமாக 50 விதைகளும், பொது இடங்களில் தொண்டு நிறுவனங்கள் / ஊராட்சி மன்றங்கள் மூலம் நடுவதற்கு அதிக பட்சமாக 100 விதைகளும் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
பனங்கன்றுகள் விநியோகம் இனத்தின் கீழ் உத்தேச இலக்கு 280 எண்ணத்திற்கு ரூ.28,000/- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயனாளிக்கு (தனி நபர்) அதிக பட்சமாக 15 பனங்கன்றுகளும், பொது இடங்களில் தொண்டு நிறுவனங்கள் / ஊராட்சி மன்றங்கள் மூலம் நடுவதற்கு அதிக பட்சமாக 30 பனங்கன்றுகளும் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். பனை சார்ந்த சிறு தொழில் முனைவோர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, சுகாதாரமான மதிப்புக் கூட்டப்பட்ட பனை பொருட்களைத் தயாரிக்கும் கூடம் அமைப்பதற்காக, பனை சார்ந்த சிறு தொழில் முனைவோருக்கு ரூ.1,00,000/- மதிப்பீட்டில், 160 சதுர அடியில் நிரந்தர கட்டமைப்பு ஏற்படுத்திட 6 எண்கள் உத்தேச இலக்கிற்கு 50% மானியமாக ரூ.3,00,000/- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இனத்தில் பயன்பெற விரும்பும் பயனாளி சொந்த நிலத்தில் / குத்தகை நிலத்தில் பனை சாகுபடி அல்லது பனை சார்ந்த தொழில் செய்பவராக இருக்க வேண்டும். பயனாளி, தொடக்க பனை வெல்ல கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். மதிப்புக் கூட்டப்பட்ட பனை பொருட்களைத் தயாரிக்கும் கூடம் ஒன்றிற்கு 50 சதவீதம் பின்னேற்பு மானியமாக ரூ.50,000/- வழங்கப்படும்.
தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியத்தின் கீழ் பனை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பது குறித்த பயிற்சி பெறும் பயனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டங்களை பற்றி மேலும் தகவலறிய விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி பயன்பெறுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியுள்ளார்.