சிக்னல் அமைக்க நிதி ஒதுக்கீடு

சிக்னல் அமைக்க நிதி ஒதுக்கீடு
7 லட்சம் ரூபாய் மதிப்பில், சிக்னல் அமைக்க நிதி ஒதுக்கீடு
கூடுவாஞ்சேரி - மகேந்திரா சிட்டி வரை 7 லட்சம் ரூபாய் மதிப்பில், சிக்னல் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில், கூடுவாஞ்சேரி - மகேந்திரா சிட்டி வரை, எட்டு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள், கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வருகின்றன. தற்போது, 95 சதவீதம் பணிகள் நிறைவடைந்து, வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

சாலை விரிவாக்க பணிகள் நடந்த போது, சாலை சந்திப்புகளில் இருந்த அனைத்து சிக்னல்களும் அகற்றப்பட்டன. ஆனால், பணிகள் நிறைவடைந்த பகுதிகளில், மீண்டும் சிக்னல் அமைக்கப்படாததால், அடிக்கடி விபத்துகள்ஏற்படுகின்றன. குறிப்பாக, மறைமலை நகர் பேரமனுார் போர்டு கார் தொழிற்சாலை சந்திப்பில், அதிக அளவில் சாலையை கடக்கும் பாதசாரிகள்விபத்தில் சிக்கி வந்தனர். அடிக்கடி உயிரிழப்புகளும் ஏற்பட்டன. எனவே, இந்த பகுதியில் சிக்னல் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளும், அப்பகுதிவாசிகளும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன் விளைவாக மறைமலை நகர் நகராட்சி சார்பில், நமக்கு நாமே திட்டம் 2023- -24ன் கீழ், பொது மக்கள் பங்களிப்பு நிதியான, 1.40 லட்சம் ரூபாயுடன் சேர்த்து, 7 லட்சம் ரூபாய் மதிப்பில், இந்த பகுதியில் சிக்னல் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில், முறையாக டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவங்கப்படும் என, மறைமலை நகர்நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story