”எல்லோருக்கும் எல்லாம்” தமிழ்நாடு அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி
”எல்லோருக்கும் எல்லாம்” தமிழ்நாடு அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி
நாமக்கல் பஸ்நிலையம் அருகிலுள்ள பூங்கா சாலையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், அமைக்கப்பட்டிருந்த ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் சாதனை விளக்கப்புகைப்படக் கண்காட்சி துவக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமை தாங்கினார், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் , வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு, மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்”, ஏழை, எளிய பெண்களின் உயர்கல்வியை ஊக்குவித்து உறுதி செய்திடும் “புதுமைப் பெண் திட்டம்”, உலகை வெல்லும் இளைய தமிழகத்தை உருவாக்கிட கல்லூரிப் படிப்புடன் வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கிடும் “நான் முதல்வன் திட்டம்”, பள்ளி செல்லும் குழந்தைகள் களைப்பின்றி பயில “முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்”, பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்திட “விடியல் பயணம் திட்டம்”, மாநிலம் முழுவதும் வேறு மாவட்டங்களிலிருந்து வந்து நகரங்களில் தங்கி பணிபுரியும் பெண்களின் நலன் மற்றும் பாதுகாப்பிற்காகத் “தோழி” தங்கும் விடுதிகள், போன்ற பல்வேறு திட்டங்கள் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் உரியவர்களுக்குச் சென்று சேர்வதை உறுதி செய்யும் நோக்குடன், மக்கள் மற்றும் அரசுக்கிடையேயான இடைவெளியைக் குறைத்திடும் வகையில், ”மக்களுடன் முதல்வர்”, ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” “நீங்கள் நலமா” உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். மேற்படி”எல்லோருக்கும் எல்லாம்” என்ற அடிப்படையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சிகள், அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், செயல்பாடுகள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் 150 -க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் அடங்கிய அரசின் சாதனை விளக்கப்புகைப்படக்கண்காட்சியில் காட்சிப்படுத்தி இருந்தனர். பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அரசின் சாதனை விளக்கப்புகைப்படக்கண்காட்சி வருகிற வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகர்மன்ற தலைவர் து.கலாநிதி, நாமக்கல் தெற்கு நகர செயலாளர் ராணா ஆனந்த், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தே.ராம்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) த.வடிவேல், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story