கந்தசாமி கோவிலில் அமாவாசை சிறப்புபூஜை
அர்த்தனாரீஸ்வரர் அலங்காரத்தில் முருகன்
மல்லசமுத்திரம் அருகே உள்ள, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் நேற்று, கார்த்திகை மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு, கோவில் முழுவதும் வண்ணமலர்களாலும், கருவறையில் பலவகையான காய்கறிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மூலவர் முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார். கோவில் உட்பிரகாரத்தில் வள்ளி, தெய்வாணையுடன் முருகன் அர்த்தனாரீஸ்வரர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். மூலவருக்கு பல்வேறு மூலிகை திரவியங்களை கொண்டு அபிசேக ஆராதனை நடந்தது. அதுமட்டுமல்லாது, கோவில் வெளிப்பிரகாரத்தில் இருக்கும் வழிவிடு கணபதி மற்றும் வேலாயுதசாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு தோற்றத்தில் அருள்பாலித்தனர். சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு, திருச்சி என பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த பக்தர்கள் நீண்டநெடு வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பெண்கள் தீபமேற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, ஈ.ஓ., மணிகண்டன், பரம்பரை அறங்காவலர் சந்திரலேகா செய்திருந்தனர்.