பிரச்சனைக்குரிய இடத்தில் அரசு சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா
அரசு சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா
மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தி கிராமத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு புதிதாக அம்பேத்கர் உருவப்படத்தை வைத்து விடுதலை சிறுத்தை கட்சியினர் அஞ்சலி செலுத்திய போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து அம்பேத்கர் பிறந்த தினம் மற்றும் நினைவு தினம் ஆகிய தினங்களில் பட்டவர்த்தியில் அரசு தரப்பில் அம்பேத்கர் உருவப்படத்தை வைத்து மரியாதை செலுத்துவது என்றும் இதில், கிராம மக்கள் இரு தரப்பினரும் தலா 20 பேர் கலந்துகொண்டு மரியாதை செலுத்துவது என்றும் முடிவாகி அம்பேத்கர் நினைவு தினம் பிறந்த தினத்தில் அரசு தரப்பில் மரியாதை செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பட்டவர்த்தி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகவாசலில் அரசு தரப்பில் அண்ணல் அம்பேத்கரின் உருவப்படம் வைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வில் வருவாய் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் மணல்மேடு காவல் ஆய்வாளர் ராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினர் மட்டும் 20 பேர் கலந்து கொண்டு, அம்பேத்கரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினர். மேலும் பிரச்சினைகள் ஏதும் ஏற்படாமல் இருக்க மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மற்றொரு தரப்பினர் மரியாதை செலுத்த வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.