அம்பேத்கரைட் பார்ட்டி ஆப் இந்தியா வேட்பாளர் உண்ணாவிரத முயற்சி

அம்பேத்கரைட் பார்ட்டி ஆப் இந்தியா வேட்பாளர் உண்ணாவிரத முயற்சி

காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பு

நீலகிரி தொகுதியில் மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அம்பேத்கரைட் பார்ட்டி ஆப் இந்தியா வேட்பாளர் உண்ணாவிரதம் இருக்க முயன்றார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க., வேட்பாளர் ஆ.ராசாவின் தேர்தல் செலவின கணக்குகளை குறைத்துக் காட்ட வலியுறுத்தி அழுத்தம் கொடுப்பதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான அருணா மீது உதவி தேர்தல் செலவின கணக்கீட்டாளர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். தேர்தலில் நியாயமாகவும்,

சுதந்திரமாகவும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று புகார் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக கடந்த 2 நாட்களாக சமூக வலைதளத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக செயல்படும், மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி அம்பேத்கரைட் பார்ட்டி ஆப் இந்தியா வேட்பாளர் ஜெயந்தி, ஊட்டி சேரிங் கிராஸ் சந்திப்பில் உள்ள காந்தி சிலை முன்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட முயன்றார்.

காந்தி சிலை பகுதிக்கு வேட்பாளர் ஜெயந்தி தனது ஆதரவாளர்கள் சிலருடன் வந்தபோது, ஊட்டி நகர துணை காவல் கண்காணிப்பாளர் துணை யசோதா, காவல் ஆய்வாளர் முரளிதரன் தலைமையிலான போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி அனுமதி இல்லாததால் உண்ணாவிரதம் இருக்க முடியாது என்று கூறினர். தொடர்ந்து,

தேர்தல் செலவின பார்வையாளரிடம் சென்று முறையிடுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்து விட்டு வேட்பாளர் ஜெயந்தி புறப்பட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், "தேர்தல் ஆணையம் சரியான நடைமுறைப்படி இங்கு பணியாற்றவில்லை. ஆளுங்கட்சிக்கு சாதகமாக ஆட்சியர் செயல்படுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.

Tags

Next Story