சோழபுரம் அருகே மின்வேலியில் சிக்கி விவசாய கூலித் தொழிலாளி உயிரிழப்பு

சோழபுரம் அருகே மின்வேலியில் சிக்கி விவசாய கூலித் தொழிலாளி உயிரிழப்பு
தேவேந்திரன்
சோழபுரம் அருகே மின்வேலியில் சிக்கி விவசாய கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதூர், சோழபுரம், திருப்பனந்தாள் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 ஏக்கரில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர், மஞ்சள், இஞ்சி, வாழைகள் உள்ளிட்டவற்றை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியுள்ளன.

விவசாய நிலங்களில் அட்டகாசம் செய்து வரும் காட்டுப் பன்றிகளை விரட்டியடிக்கவும், சேதமான பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோழபுரம் அருகே அய்யாநல்லூர் பகுதியில் வயலுக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்துவரும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த, வயல் உரிமையாளர் விஜயகுமார், தொழிலாளி ரத்தினம் இருவரும் சேர்ந்து சட்டவிரோதமாக வயலை சுற்றி மின்வேலி அமைத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை அதே பகுதியைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளியான தேவேந்திரன்(55), வயல் வேலைக்கு செல்வதற்காக சென்றபோது, மின்வேலி அமைத்திருப்பது தெரியாமல் அதன் மீது கால் வைத்துள்ளார். இதில், மின்சாரம் தாக்கி அந்த இடத்திலேயே தேவேந்திரன் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சோழபுரம் போலீஸார், தேவேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வயலை சுற்றி மின்வேலி அமைத்திருந்த வயல் உரிமையாளர் விஜயகுமார், தொழிலாளி ரத்தினம் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story