ஏ.டி.எம்., மிஷினை உடைத்து பணம் திருட முயற்சி

ஏ.டி.எம்., மிஷினை உடைத்து பணம் திருட முயற்சி

பைல் படம்

கோவில்பட்டியில் ஏ.டி.எம் ., மிஷினை உடைத்து பணத்தை திருட முயன்றவரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பசுவந்தனை சாலையில் ஒரு திருமண மண்டபம் அருகே தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று ஏ.டி.எம் மையத்திற்கு வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க சென்ற போது ஏ.டி.எம். எந்திரத்தின் கீழ் பகுதி திறந்து கிடந்தது. மேலும் அதில் இருந்து எச்சரிக்கை அலாரம் சத்தம் ஒலித்து கொண்டே இருதுள்ளது. இதனையடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதேநேரத்தில் வங்கி தரப்பில் இருந்தும் எச்சரிக்கை மணி ஒலிப்பது குறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அங்கு விசாரணை நடத்தினர். மேலும் ஏ.டி.எம். மையத்திலிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் அன்று அதிகாலை 4.33 மணிக்கு ஏ.டி.எம். எந்திரத்தின் பணம் இருக்கும் அடிப்பகுதியை கழற்ற முயற்சி செய்து கொண்டிருக்கும் காட்சிகளும், எச்சரிக்கை அலாரம் சத்தம் ஒலித்ததை தொடர்ந்து அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடியதும் அதில் பதிவாகி இருந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள், அந்த ஏ.டி.எம். மையத்திற்கு வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் தனிப்படை அமைத்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் அடிப்படையில் மர்ம நபரை தேடி வந்தனர்.

இந்நிலையில் அந்த மர்ம நபர் கோவில்பட்டி பசுவந்தனை ரோடு, ராமலட்சுமி நகரை சேர்ந்த சங்கர் (45) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags

Next Story