நாமக்கல் அரசு பள்ளியில் கண்காணிப்பு கேமரா திருட முயற்சி
அரசினர் மேல்நிலைப் பள்ளி
நாமக்கல் அரசு பள்ளியில் சிசிடிவி கேமராவை திருட முயற்சித்த மர்ம நபரைபோலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல், மோகனூர் ரோட்டில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.
125 ஆண்டுகள் பழமையான இப்பள்ளியில், நாமக்கல் சுற்று வட்டாரம் மற்றும் கொல்லிமலையை சேர்ந்த, 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், அரசு பொதுத்தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் வைக்கும் அறை முன், இரண்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது.
அதில் ஒன்று திருட்டுப்போனது தெரியவந்தது. இது குறித்து, பள்ளி உதவி தலைமையாசிரியர் ராமு, நாமக்கல் போலீஸ் ஸ்டேசனில் புகார் செய்தார். இந்நிலையில், பள்ளி துப்புரவு பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பள்ளி வளாகத்தில் உள்ள நூலகத்திற்கு பின்புறம், திருடப்பட்ட சிசிடிவி கேமரா உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இது குறித்து, நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், லுங்கி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், அந்த சிசிடிவி கேமராவை கழற்றுவது, மற்றொரு கேமராவில் பதிவாகி உள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தினமும், அதிகாலை, 4 முதல், இரவு 9 மணி வரை, பல்வேறு தரப்பினரும் நடைபயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
அதனால், பள்ளி வளாகம் முழுவதும், சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்த பள்ளி கல்வித்துறையும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.