ஒரத்தநாடு அருகே அகப்பை தயாரித்து விற்கும் முதியவர்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தள்ளாடும் வயதிலும் மனம் தளராமல் அகப்பை தயாரிக்கும் பணியில் முதியவர் ஈடுபட்டு வருகிறார். பொங்கல் பண்டிகை பெரும்பாலான கிராமங்களில் இன்றளவும் பழமை மாறாமல் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக பொங்கலிடும் போது முக்கிய இடம் பெறுவது மண்பானைகளும், தேங்காய் கொட்டாங்குச்சியால் ஆன அகப்பையும் தான்.
இதுகுறித்து அகப்பை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாச்சூர் மழவராட்சிதோப்பு கிராமத்தை சேர்ந்த முதியவர் ராமசாமி கூறுகையில்: கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பொங்கல் பண்டிகைக்காக அகப்பை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே தேங்காய் கொட்டாங்குச்சிகளை சேகரிக்கும் பணியை தொடங்கி விடுவோம்.
கொட்டாங்குச்சியை 4 அல்லது 5 நாட்கள் தண்ணீரில் ஊற வைப்போம். பின்னர் அதனை வெளியே எடுத்து உளியால் பக்குவமாக செதுக்குவோம். மூங்கில் மரத்தை வெட்டி அதில் 2 அடி அல்லது தேவைக்கேற்ப நறுக்கி கைப்பிடி தயார் செய்து கொட்டாங் குச்சியை இணைத்துவிட்டால் அகப்பை தயாராகி விடும். தற்போது 600க்கும் மேற்பட்ட அகப்பைகளை தயார் செய்து வைத்துள்ளேன். ஒரு ஜோடி அகப்பை ரூ.40க்கு விற்பனை செய்கிறேன்.
பொது மக்களிடமும் அகப்பைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அகப்பைகளை பொது மக்கள் தேடி வந்து வாங்கி செல்கின்றனர்: அருகில் உள்ள சந்தைகளுக்கு எடுத்து சென்று எனது குடும்பத்தாரும் அகப்பைகளை விற்பனை செய்கிறார்கள்.
இதனால் போதிய வருமானம் கிடைப்பதால் மகிழ்ச்சி அடைகிறேன். இனிவரும் காலங்களிலும் இதுபோன்ற தரமான அகப்பைகளை தயாரித்து மக் களுக்கு கொடுப்பதே எனது எண்ணமாக இருக்கிறது என கூறினார். தள்ளாடும் வயதிலும் மனம் தளராமல் அகப்பைகளை தயாரித்து விற்பனை செய்யும் முதியவரை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வெகுவாக பராட்டி வருகின்றனர்.