ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சிலைகள் மாயமான விவகாரம் - போலீசார் ஆய்வு

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பழமையான கொடிமரங்கள், யாளி சிலைகள் மாயமான விவகாரத்தில் சிலை கடத்தல் பிரிவு துணை கண்காணிப்பாளர் தலைமையில் பத்துக்கு மேற்பட்ட போலீசார் திடீர் ஆய்வு...*
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் கொடிமரம் மற்றும் சிலைகள் காணவில்லை என இரண்டு ஆண்டுகளாக இருந்து வரும் நிர்வாக அதிகாரியின் புகார் அடிப்படையில் இன்று திடீர் சிலை கடத்தல் பிரிவு துணை கண்காணிப்பாளர் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் பழமையான கொடி மரங்கள் மற்றும் கற்சிலைகள் காணவில்லை என செயல் அதிகாரி சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் கடந்த 29ஆம் தேதி புகார் அளித்திருந்தார் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீ ஆண்டாள் கோவிலானது 108 வைணவ ஸ்தலங்களில் மிக முக்கியமானதாக கருதப்படும் ஸ்தலமாகும். இக்கோவிலில் வருடம் தோறும் திருவாடிப்பூரஉற்சவம், மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம் மற்றும் திருக்கல்யாண உற்சவங்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இவ் விழாக்களில் கலந்து கொள்ள தமிழக மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். இந்நிலையில் திருக்கோவில் நிர்வாக அதிகாரி முத்துராஜா மதுரையில் அமைந்துள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் ஒன்று அளித்திருந்தார்.அதில் கடந்த 2015 மற்றும் 16 ஆம் ஆண்டுகளில் ஸ்ரீ ஆண்டாள் கோவில் குடமுழுக்கு விழா மற்றும் தமிழக அரசின் முத்திரை சின்னமாக விளங்கும் இராஜகோபரம் அமைந்துள்ள ஸ்ரீ வடபத்ரசயனர் திருக்கோவில் கும்பாபிஷேக விழாக்கள் நடைபெற்றது. குறிப்பாக திருக்கோவிலில் நடைபெறும் உற்சவங்களின் போது விழாக்கள் ஆரம்பமாகும் போது கொடியேற்றும் கொடி மரங்கள் மூன்றும் அகற்றப்பட்டு புதிய கொடி மரங்கள் நிர்மாணிக்கப்பட்டது. அவ்வாறு அகற்றப்பட்ட பழமையான மூன்று கொடி மரங்களில் செப்பு தகடு உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்கள் பதிக்கப்பட்டிருந்தது. மூன்று கொடி மரங்களில் தற்போது ஒன்றைத் தவிர மற்ற இரண்டு கொடி மரங்கள் கோவில் வளாகத்தில் இருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டது. இச்செயல் சட்ட விரோதமான செயலாகும் காணாமல் போன இரண்டு கொடி மரங்கள் குறித்து விசாரித்தபோது திருக்கோவில் வெள்ளை அடிப்பு பணி நடந்த போது மரும நபர் லாரி மூலம் கொடி மரங்களை வெளியே எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இது சட்டவிரோத செயலாகும். ஆகையால் நடவடிக்கை எடுக்கும்படி புகார்அளித்துள்ளார்.மேலும் முன்னதாக கடந்த 2008,2009 ஆம் ஆண்டுகளில் ஸ்ரீ ஆண்டாள் கோவில் கொடிமரம் அருகே அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வாசற்படியில் அமைக்கப்பட்டிருந்த பழமையான கற்களான யானை சிலைகள் இரண்டு காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருக்கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கொடி மரங்கள் சட்டவிரோதமாக வெளியே எடுத்துச் சென்ற சம்பவம் ஊர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது . இது தொடர்பாக இன்று சிலை கடத்தல் பிரிவு துணை கண்காணிப்பாளர் மற்றும் இரண்டு இன்ஸ்பெக்டர் தலைமையில் மொத்தம் 10 போலீசார் கோவிலில் உள்ள வளாகத்தில் தொடர்ந்து ஆய்வு மற்றும் விசாரனை மேற்கொண்டனர். திருக்கோவில் நிர்வாக அதிகாரியாக முத்துராஜா இரண்டு வருடங்களாக இருந்து வரும் நிலையில் அவர் பதவியேற்கும் போது கோவிலில் கொடி மரங்கள் சிலைகள் காணாமல் சென்றது குறித்து தெரியாதா? நடவடிக்கை அப்போது ஏன் எடுக்கவில்லை அல்லது தெரிந்தும் தெரியாதது போல் இருந்தாரா? வேறு ஏதும் உள்நோக்கங்கள் உள்ளதா என்று பொதுமக்களிடையே கேள்வி எழும்பியுள்ளது.

Tags

Next Story