பங்குனி பொங்கல் விழா; குதிரை வாகனத்தில் வேட்டைக்கு செல்லும் மாரியம்மன்
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில்,இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான மாரியம்மன் கோவிலில், பங்குனி பொங்கல் திருவிழா உற்சாகமாக நடைபெற்று வருகிறது. பங்குனி பொங்கல் 8ம் நாள் திருவிழாவை முன்னிட்டு, மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து, கீழ ரத வீதியில் உள்ள மண்டகப்படியில் ஸ்ரீமாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
தொடர்ந்து, 'குதிரை' வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீமுப்பிடாரியம்மன் கோவில் முன்பு வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.பின்னர், ஸ்ரீமாரியம்மன் 'குதிரை' வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று, பங்குனி பொங்கல் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கயறு குத்து மற்றும் அக்கினிசட்டி திருவிழா நடைபெற்று வருகிறது.ஏராளமான பக்தர்கள் அக்கினிசட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் உபயதாரர்கள் சிறப்பாக செய்துள்ளனர்.