கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் -அமைச்சர் மா.மதிவேந்தன் துவக்கி வைத்தார்

கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் -அமைச்சர் மா.மதிவேந்தன் துவக்கி வைத்தார்

மா.மதிவேந்தன்

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், முத்துக்காளிப்பட்டி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தலைமை தாங்கினார். நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் முன்னிலை வகித்தார். . வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் முகாமை துவக்கி வைத்து பேசும் போது,

தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவ வசதி கிடைக்கப்பெறாத தொலைதூர உட்கிராமங்களில் பொதுமக்களுக்கு கால்நடை வசதி கிடைக்கும் வகையில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாமை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2023-2024 ஆம் நிதியாண்டில் நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்திற்கு 20 முகாம்கள் வீதம் நாமக்கல் மாவட்டத்தில் 300 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இம்முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், ஆண்மை நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், செயற்கை முறை கருவூட்டல் செய்தல், மலடு நீக்க சிகிச்சை செய்தல், சினை பரிசோதனை செய்தல், சிறு அறுவை சிகிச்சைகள், தாது உப்புக் கலவை வழங்குதல், சிறு கண்காட்சி, சிறந்த கால்நடை வளர்ப்பு முறை பின்பற்றும் விவசாயிகளுக்கு விருது மற்றும் கன்றுகளுக்கு பரிசு வழங்குதல், சுகாதார நடவடிக்கைகள், கால்நடை வளர்ப்பு பற்றிய தொழில்நுட்ப வல்லுனர்களுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் நடைபெற உள்ளது.

எனவே கால்நடை முகாம் நடைபெறும் பொழுது கிராம மக்கள் தங்களது கால்நடைகளைக் கொண்டு வந்து பயன் பெறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்தார்.

தொடர்ந்து சிறந்த கன்றுகள், சிறந்த கால்நடை பராமரிப்புக்கான பரிசுகளையும், கால்நடை வளர்ப்போருக்கு தீவன புல் கரணைகள் மற்றும் தாது உப்புக் கலவைகளையும் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் இராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கே.பி.ஜெகநாதன், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் மருத்துவர் செல்வராஜ், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் (பொறுப்பு) மரு.நடராஜன், துணை இயக்குநர் மரு.அருண் பாலாஜி, உதவி இயக்குநர்கள் மரு.மருதுபாண்டி, மரு.முருகேசன், முத்துக்காளிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் அருள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் மருத்துவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story