அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ. 47.26 கோடி மதிப்பில் 721 பணிகள்
திட்ட பணிகள்
அனைத்து கிராம ஊராட்சிகளும் முழுமையான வளர்ச்சியை அடையும் நோக்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டமானது மாநில அரசால் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஐந்து ஆண்டுகளில் அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதே ஆகும்.
அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2ன் கீழ் வேலூர் மாவட்டத்திலுள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் கடந்த 2021 முதல் 2023 வரை இரண்டு நிதி ஆண்டுகளில் ரூ.7,90,99,814 /- மதிப்பில் 75 நீர்நிலை புணரமைப்பு பணிகளும், ரூ.14,99,82,631/- மதிப்பில் தெருக்கள் மற்றும் வீதிகள் அமைக்கும் 300 பணிகளும், ரூ.36,50,223/- மதிப்பில் சமத்துவசுடுகாடு, இடுகாடுகள் என அடிப்படை வசதிகளுக்கான 6 பணிகளும், ரூ.12,57,13,000/- மதிப்பில் பள்ளி உட்கட்டமைப்புகள், பொதுபயன்பாட்டு கட்டமைப்புகள் போன்ற 144 பணிகளும், ரூ.4,19,18,039/- மதிப்பில் பசுமை மற்றும் சுத்தமான கிராமமாக பராமரிக்கும் வகையில் 108 பணிகளும், ரூ.7,22,47,466/- மதிப்பில் பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் சந்தைப்படுத்தும் வசதிகளை ஒருங்கிணைத்து மேம்படுத்தும் 88 பணிகளும் என மொத்தம் ரூ.47,26,11,173/-மதிப்பில் 721 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் 2023-24 ஆம் நிதியாண்டில் வேலூர் மாவட்டத்திலுள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராமங்களில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் II ன் கீழ் நீர்நிலைகளை புணரமைத்தல், குக்கிராமங்களில் தெருக்கள் மற்றும் வீதிகள் அமைத்தல், சமத்துவ சுடுகாடு மற்றும் இடுகாடுகள், பள்ளிகளில் உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொதுபயன்பாட்டு கட்டமைப்புகளை உருவாக்குதல், பசுமை மற்றும் சுத்தமான கிராமமாக பராமரித்தல், பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் சந்தைப்படுத்தும் வசதிகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துதல் போன்ற 490 எண்ணிக்கையிலான பணிகளுக்கு ரூ.21,38,20,878/- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அண்ணா மறுமலர்ச்சி திட்டம் IIன் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 20 விழுக்காடு கிராம ஊராட்சிக்ள் குக்கிராமங்களில் உள்ள அடிப்படை உட்கட்டமைப்பு இடைவெளி தேவைகள் குறித்த கணக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சிகளின் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு ஊரக மக்களிடையே ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.