அண்ணாமலையால் டெபாசிட் கூட வாங்க முடியாது: கே.பாலகிருஷ்ணன்
கே. பாலகிருஷ்ணன்
பாஜக - அதிமுக கூட்டணி இல்லை என உறுதியாக சொல்லி விட முடியாது.. அண்ணாமலையால் டெபாசிட் கூட வாங்க முடியாது : கே.பாலகிருஷ்ணன்!! மக்களிடம் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லாததால்,
பிரதமா் நரேந்திர மோடி ராமரை முன்னிறுத்தி அரசியல் செய்கிறாா் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன், மதுரை தொகுதியில் செய்த சாதனைகள் குறித்து, ‘ஐந்தாண்டுகளில் 150 வெற்றிகள்’ என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்க அரங்கில் நடைபெற்ற விழாவில்,
மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் புத்தகத்தை வெளியிட, வணிக வரித்துறை, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி பெற்றுக் கொண்டாா். பின்னா், கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது:- மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் நலனுக்காக, அடிப்படை பிரச்னைகளுக்காக எந்தவித சமரசமும் இன்றி போராடி வருகிறது. எங்களது கட்சி, தனது சாதனைகளை புத்தகமாக வெளியிட்டு மக்களை நேரடியாக சந்திக்கிறது. ஆனால், மத்தியில் ஆட்சி புரியும் பிரதமா் நரேந்திர மோடி தனது சொந்த முகத்தை மக்களிடம் காட்டி வாக்கு கேட்க முடியவில்லை. இதனால்தான் ராமா் என்ற முகத்தைக் காட்டி மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி வாக்கு கேட்கும் முயற்சியில் இறங்கியுள்ளாா்.
பாஜகவின் இந்த அரசியலுக்கெல்லாம் மக்கள் ஏமாற மாட்டாா்கள். அந்த கட்சியின் மாநிலத் தலைவா் அண்ணாமலை மக்களவைத் தோதலில் போட்டியிட்டால் டெபாசிட்கூட வாங்க முடியாது. பக்தி வேறு, அரசியலில் வேறு என்பதை பாஜகவினா் புரிந்து கொள்ள வேண்டும். வருகிற மக்களவைத் தோதலில் பாஜகவையும், அதிமுகவையும் வீழ்த்த வேண்டும். தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. தேர்தல் பத்திரம் குறித்து உச்சநீதிமன்றம் தெளிவாக தீா்ப்பு வழங்கியுள்ளது.
தோதல் பத்திரத்தை அறிமுகப்படுத்தும் போது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிா்ப்பை தெரிவித்தது. தோதல் பத்திரத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்திற்கும் சென்று வெற்றி பெற்றது. மக்களவையில் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, 19 மக்கள் விரோத மசோதாக்களை எந்தவித விவாதமும் இன்றி, நாணயமற்ற முறையில் மத்திய அரசு நிறைவேற்றியது.
மத்தியில் மக்கள் விரோத ஆட்சி நடைபெறுவதால், இதுவரை மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டப்படவில்லை. எனவே, வரும் மக்களவைத் தோதலில் மக்கள் நலனில் அக்கறை உள்ள ஆட்சி அமைய அனைவரும் பாடுபட வேண்டும், என்றாா். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயா் வ.இந்திராணி பொன்வசந்த், தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன், மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர்.