வளர்ச்சிக்கு எதிராக இருக்கக்கூடியவர் எம்.பியாக இருக்கிறார்- அண்ணாமலை!
அண்ணாமலை
கோவை:கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக செயல் வீரர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக கோவை நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தமிழ்நாடு தலைவருமான அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் கோவை மக்களின் அன்பு நம்முடன் இருக்கின்றது எனவும் வரவுள்ள 25 நாட்களும் பாஜகவினர் கடுமையாக உழைக்க வேண்டும் என தெரிவித்த அவர் வரும் புதன்கிழமை அன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறினார்.
கோவையில் நாம் வெற்றியை சுவைத்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது என தெரிவித்த அவர் 1998,99ல் சிபி ராதாகிருஷ்ணன் செய்த பணிகளை கோவை மக்கள் தற்பொழுது பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.இந்த தேர்தலிலும் மோடி தான் வெற்றி பெறுவார் என தெரிவித்தவர் 400 எம்பியா அல்லது 450 எம்பியா? என்பதுதான் இந்த தேர்தல் எனவும் கூறினார்.2002 ஆம் ஆண்டு தான் கோவைக்கு தான் முதன்முதலாக தனது அப்பாவுடன் வந்ததாக தெரிவித்த அவர் ஒவ்வொரு நாளும் கோவை மீது அன்பும் பாசமும் தான் அதிகரித்தது எனவும் ஒரு நாளும் குறையவில்லை என்றார்.கோவை பெண்ணையே மணமுடித்து வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார். கோயமுத்தூர் பொழிவை இழந்து வருவதாகவும் கமிஷன் கிடைக்கிறது என்பதற்காக கோவைக்கு வருகிறார்கள் எனவும் கோவையில் கட்டப்பட்ட மேம்பாலத்தை சுட்டிக்காட்டிய அவர் பாலத்திற்கு கீழ் சாலைகள் மோசமாக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் கோவையின் வளர்ச்சிக்கு எதிராக இருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒருவர் எம்பியாக இருக்கிறார் என பி.ஆர். நடராஜன் சுட்டிக் காட்டிய எது வந்தாலும் வேண்டாம் என்று வளர்ச்சியை அவர் தடுப்பதாக சாடினார். இந்தியாவில் எந்த நகரங்கள் வளர்ந்தாலும் கோவை இன்னும் வளர முடியும் என்பதை இந்த ஐந்து வருட காலங்களில் நாம் காண்பிக்க வேண்டும் எனவும் கோவையின் வளர்ச்சியை மூன்று விதமாக பார்ப்பதாக தெரிவித்தவர் அதில் முதலாவது வாழ வேண்டும்,இரண்டாவது நிம்மதியாக வாழ வேண்டும்,மூன்றாவது நிம்மதியை தாண்டி சந்தோஷமாக வாழ வேண்டும் என தெரிவித்தார்.
கோவையில் இரண்டு விதமான போட்டிகள் உள்ளது என கூறிய அவர் முதலாவது இதுவரை இருந்தவர்கள் செய்த தவறான அரசியலை சரி செய்ய வேண்டும் இரண்டாவது எங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு கோவையை வளர்ச்சியடைய செய்ய வேண்டும் என்றார்.வருகின்ற தேர்தலில் அண்ணாமலை பட்டனை அழுத்தினால் கோவை வளர்ச்சி பெறும் என்பதை மக்களிடம் பாஜகவினர் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டவத் இந்த தேர்தலையடுத்து 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். கோவை எங்கள் கோட்டை என்று ஒரு கட்சி கூறுகிறது இன்னொரு கட்சி புதிய கோட்டை என்று கூறுகிறது இன்னொரு கட்சி கோவை எங்களுடைய பழைய கோட்டை என்று கூறுகிறது என்றவர் நான் உங்கள் கோட்டைகளை தகர்ப்பதற்கோ கோட்டைகளில் ஓட்டை போடுவதற்கோ வரவில்லை மக்களுக்காக வந்திருக்கிறேன் எனவும் பணம் கொடுத்து இந்த தேர்தலை சந்திக்கப் போவதில்லை எனவும் பணம் கொடுத்து வாக்காளரை கொச்சைப்படுத்த நான் விரும்பவில்லை என தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 295 வாக்குறுதிகளை அளித்து அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது எனவும் இதனை எதிர்க்கட்சிகளுக்கு சவாலாக விடுகிறேன் என தெரிவித்த அவர் அது குறித்து ஒரு புத்தகத்தையும் வெளியிட இருப்பதாக தெரிவித்தார். திமுக வாக்குறுதி என்பது ரிப்பீட் செய்வது போன்று இருப்பதாகவும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் போன்று இருப்பதாகவும் விமர்சித்தவர் 2019 ஆம் ஆண்டு பெட்ரோல் டீசல் விலை குறைப்பு என்பது நமது வாக்குறுதியில் இல்லை ஆனால் மக்களுக்கு பிரச்சினை வரும் பொழுது அதனை குறைத்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.
மாதம் ஆயிரம் ரூபாயை கொடுப்பதை மத்திய அரசுதான் கொடுக்கிறது என்று திமுக ஏற்றுக் கொண்டால் அதனை நிறுத்த மாட்டோம் என்று நாங்கள் உறுதியளிப்பதாகவும் மற்றொரு கட்சி ஒரு படி மேலே சென்று அந்த ஆயிரம் ரூபாயை 3000 ரூபாயாக மத்திய அரசை வலியுறுத்தி வாங்கி தருவேன் என்று கூறுகிறது என்றார்.ஒரு கட்சி போஸ்ட்மேனா இருந்து மத்திய அரசிடம் இருந்து திட்டங்கள் வாங்கி தருகிறது என்றால் போஸ்ட்மேன் ஆக இருப்பதற்கு எதற்கு தமிழ்நாட்டில் ஓட்டு போட வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார். எதிர்கட்சியினரின் சில வாக்குறுதிகள் விசித்திரமாகவும் விந்தையாகவும் இருப்பதாகவும் விமர்சித்தார்.