மின் விளக்குகளால் ஜொலிக்கும் அண்ணாமலையார் கோவில் கோபுரங்கள்

மின் விளக்குகளால் ஜொலிக்கும் அண்ணாமலையார் கோவில் கோபுரங்கள்

மின்னொளியில் ஜொலிக்கும் கோபுரங்கள் 

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா வரும் 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக வரும் 26ம் தேதி மகா தீபம் ஏற்றப்படும். இந்த ஆண்டு தீபத்திருவிழாவில், சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, விரிவான முன்னேற்பாடுகள் பல்வேறு துறைகளின் சார்பிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.நேற்று அலங்கார மின் விளக்குகளின் ஒளியில் ராஜகோபுரம் பேய்க்கோபுரம், திருமஞ்சன கோபுரம், வல்லாள மகாராஜா கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், கிளி கோபுரம், தெற்கு கட்டை கோபுரம், மேற்கு கட்டைகோபுரங்கள் ஜொலித்தன.இந்நிலையில், தீபத்திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்க விரும்புவோர், முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை கட்டுப்பாடு விதித்திருக்கிறது. இதுகுறித்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்ததாவது: தீபத்திருவிழாவின் போது அன்னதானம் அளிக்க விரும்பும் தனி நபர்கள் அல்லது அமைப்புகள் உணவு பாதுகாப்புத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். அதற்காக, www.foscos gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்து மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். அன்னதானம் வழங்க விரும்புவோர், திருவண்ணாமலை செங்கம் சாலை, பழைய அரசு மருத்துவமனையில் இயங்கும் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பத்தை அளித்து அனுமதி பெற வேண்டும். மேலும், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முகவரியை உறுதி செய்ய ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஆவணம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே அன்னதானம் அளிக்க வேண்டும். அனுமதி அளிக்கப்பட்ட நாள், நேரத்தில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்க கூடாது. கிரிவலப்பாதையில் பக்கதர்களுக்கு இடையூறு இல்லாமல் கிரிவலப்பாதையில் இருந்து 100 மீட்டர் உட்புறம் அன்னதானம் வழங்க வேண்டும். நோய்தொற்று உள்ளவர்களை அன்னதானம் சமைக்கவோ அல்லது வழங்கவோ அனுமதிக்ககூடாது. வாழை இலையில் மட்டுமே அன்னதானம் வழங்கவேண்டும். உணவு பொருட்கள் தரமானதாகவும், துய்மையானதாகவும் மற்றும் கலப்படம் இல்லாமலும் இருக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தட்டுகளில் அன்னதானம் வழங்கக்கூடாது. பிளாஸ்டிக் டம்ளர்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய கூடாது. உணவு கழிவு பொருட்களை போடுவதற்காக குப்பை தொட்டிகளை ஏற்பாடு செய்து, அன்னதானம் அளிப்பவர்களே உணவு கழிவுகளை சேகரித்து அகற்ற வேண்டும். அன்னதானம் வழங்கும் இடத்தை சுத்தம் செய்து விட்டு செல்ல வேண்டும். அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்குவோர் மற்றும் வழிக்காட்டு முறைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story