தஞ்சை அருகே தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு

தஞ்சை அருகே தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

தஞ்சாவூர் அருகே திருக்கானுர்பட்டி எம்ஜிஆர் நகரில் தேர்தலை புறக்கப்பணிப்பதாக கூறி, கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் அருகே, கிராம மக்கள் வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காததால் தேர்தலை புறக்கப்பணிப்பதாக கூறி, வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டி ஊராட்சியை சேர்ந்த எம்ஜிஆர் நகரில் சுமார் 500 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பகுதியில் வசித்து வரும் இவர்கள், தினக்கூலி தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு இதுவரை குடியிருக்கும் வீட்டுக்கு மனைப் பட்டா வழங்கவில்லை. கடந்த இரு ஆண்டுகளாக வீட்டு வரியும் வசூலிக்கப்படவில்லை.

போதுமான குடிநீர் வசதியும், சாலை வசதியும் வழங்கவில்லை எனக் கூறி வெள்ளியன்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி அப்பகுதியில் ஒன்று கூடி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்,

எங்களது நகரில் 600க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். எங்களது கோரிக்கையான அடிப்படை வசதிகள் மற்றும் குடியிருக்கும் வீட்டுக்கு மனைப் பட்டா கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆனால் ஆட்சியாளர்கள் யாரும் எங்களது கோரிக்கைகளை கண்டு கொள்வதில்லை. மேலும், எங்களது பகுதியை நீர்வழி புறம்போக்கு என தவறான பதிவை வருவாய்த்துறையினர் குறிப்பிட்டுள்ளதால், எங்களுக்கு வருவாய்த்துறையினர் பட்டா வழங்க மறுக்கின்றனர்.

எங்களது பகுதியை மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் ஆய்வு செய்து, எங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும், இல்லையென்றால் நாங்கள் வருகிற மக்களவைத் தேர்தலை புறக்கணிப்போம் என்றனர்.

Tags

Next Story