கல்லூரி முதல்வர், பேராசிரியர் மீது லஞ்ச ஒழிப்பு வழக்குப் பதிவு!
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் அரசுக் கலைக் கல்லூரியில் சுமார் 4 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் 2023-24ம் கல்வி ஆண்டுக்கான இளங்கலை மாணவர் சேர்க்கை கடந்த ஜூன் மாதம் முடிந்தது. முதற்கட்ட கலந்தாய்வில் மாணவர்கள் தங்கள் விண்ணப்பித்த பாடப்பிரிவு கிடைக்காதபோது, அடுத்து கிடைத்த பாடப்பிரிவில் சேர்ந்துள்ளனர்.
அடுத்தடுத்த கலந்தாய்வுகளின்போது விரும்பிய பாடப்பிரிவில் காலியிடம் இருந்ததால் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டு அந்த பாடப் பிரிவிற்கு மாறி உள்ளனர். இவ்வாறு ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு மாறுவதற்காக பேராசிரியர் ரவி, மாணவர்களிடம் கூகுள்பே மூலமும், ரொக்கமாகவும் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து கூகுள் பே மூலம் பணம் அனுப்பிய செல்போன் ஸ்க்ரீன் ஷாட்டுகள் மூலம் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, கல்லூரி கல்வி இயக்குனரகம், தமிழக டி.ஜி.பி., ஆகியோருக்கு ஆன்லைன் மூலம் மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.
மேலும் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பேசிய ஆடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்நிலையில் தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் கல்லூரி கல்வியியல் இயக்குனர் ஆகியோர் உத்தரவின் பேரில் கோவை மண்டல கல்லூரி கல்வியியல் இணை இயக்குனர், ஊட்டி அரசுக் கலைக் கல்லூரிக்கு வந்து சுமார் 30 மாணவர்கள், 4 பேராசிரியர்கள், மற்றும் கல்லூரி முதல்வரிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தினார்.
இதை தொடர்ந்து கோவை மண்டல கல்லூரி இணை இயக்குனர் தனது, விசாரணை அறிக்கையை உயர் கல்வித்துறை செயலாளர் மற்றும் கல்லூரி கல்வியியல் துறை இயக்குனருக்கு அனுப்பி வைத்தார். அதன் அடிப்படையில் ஊட்டி அரசு கல்லூரி முதல்வர் அருள் ஆண்டனி மற்றும் பேராசிரியர் ரவி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் ஊட்டி அரசு கல்லூரி அருள் ஆண்டனி மற்றும் பேராசிரியர் ரவி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.