கன்னியாகுமரியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை
திருநெல்வேலி மாவட்டம் வி. கே. புரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் பொறுப்பு அலுவலராக இருப்பவர் வேலம்மாள். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திருநெல்வேலி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
அந்த வழக்கின் அடிப்படையில் இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் திருநெல்வேலி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேற்படி சார்பதிவாளர் பொறுப்பு வகிக்கும் வேலம்மாளின் மகள் கிருஷ்ணவேணியின் வீடு கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் ஊரில் உள்ளது. அங்கு குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் ஒரே நேரத்தில் இங்கும் சோதனை நடைபெற்று வருகிறது.
குமரியில் நடைபெற்ற சோதனையில் ஏராளமான வங்கி பண பரிவர்த்தனைகள் செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சோதனை தொடர்ந்து நடந்து வருவதால் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இன்னும் கூடுதலாக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த விபரங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது