அமலாக்கத்துறைக்கு வழக்கு ஆவணங்களை தர ஊழல் தடுப்பு போலீசார் எதிர்ப்பு
நீதிமன்றம்
கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சி. விஜயபாஸ்கர். இவர் தற்போது விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக உள்ளார்.அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 35.79 கோடி சொத்து சேர்த்ததாக மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே மார்ச் 23-ஆம் தேதி விஜயபாஸ்கரின் சென்னை, இலுப்பூர் வீடுகளில் அமலாக்கத் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அத்துடன் சொத்துக் குவிப்பு வழக்கின் ஆவணங்களின் நகல்தரக் கோரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதுகுறித்து பதில் அளிக்க, மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் ஆஜராகினர். அப்போது, ஊழல் தடுப்புப் 4 பிரிவு போலீஸார் எழுத்துப்பூர்வ அறிக்கைகளைத் தாக்கல்செய்தனர். தங்களை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் தாக்கல் செய்திருந்த மனுக்களுக்கு, அவர்களை விடுவிக்கக் கூடாது என்று ஓர் அறிக்கையை தாக்கல் செய்தனர்.
மேலும், அமலாக்கத் துறையினருக்கு வழக்கு ஆவணங்கள் எதையும் நகலாகத் தரக் கூடாது. அவர்கள் ஆவணங்களைப் பார்வையிடலாம் என்று குறிப்பிட்டு மற்றொரு அறிக்கையும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரால் தாக்கல் செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை மே 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட முதன்மை நீதிபதி கா. பூர்ணஜெய ஆனந்த் உத்தரவிட்டார்.