வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் கணக்கில் வராத ரூ.1.10 லட்சம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி–கடலையூர் ரோட்டில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இந்நிலையில் நேற்று காலையில் கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஊழியர்கள் வழக்கம்போல் பணியில் இருந்தனர். காலை 11 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர் பால்துரை தலைமையில் இன்ஸ்பெக்டர் அனிதா உள்ளிட்ட போலீசார் கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்றனர். அவர்களில் சிலர் ஓட்டுனர், நடத்துனர் போன்று காக்கி சட்டை, பேன்ட் மற்றும் லுங்கி அணிந்து மாறுவேடத்தில் சென்றனர்.

தொடர்ந்து போலீசார், அங்கிருந்தவர்களிடம் விசாரித்து, அதில் பொதுமக்களை மட்டும் வெளியேற அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அலுவலக பிரதான நுழைவு வாயில் கதவு இழுத்து மூடப்பட்டது. போக்குவரத்து அலுவலகம், அங்குள்ள ஓட்டுனர் உரிமம் பெற புகைப்படம் எடுக்கும் அறை ஆகியவற்றில் சோதனையில் ஈடுட்டனர். மேலும், வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன், மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாத் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

அலுவலகத்துக்கு உள்ளே இருந்த புரோக்கர்கள், ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், ஆம்னி பஸ் மற்றும் மினி பஸ்களின் உரிமையாளர்கள் சுற்றி வளைக்கப்பட்டு அவர்களிடம் இருந்த செல்போன்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் அலுவலகத்தில் உள்ள கணினிகள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தனர். அதேபோல், அலுவலக அறைகள், கழிப்பறை உள்ளிட்ட அறைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.1.10 லட்சம் சிக்கியது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து வட்டார போக்குவரத்து அலுவலர், புரோக்கர்கள் உள்ளிட்ட 18 பேரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணை இரவு வரை நீடித்தது. கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் கணக்கில் வராத ரூ.1.10 லட்சம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story