குப்பை கொட்ட எதிர்ப்பு:வாகனத்தை சிறை பிடித்த கிராம மக்கள்
சிறைபிடிக்கப்பட்ட வாகனம்
சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் தினசரி சுமார் 13.5 டன் அளவிலான குப்பைகள் நகராட்சி நிர்வாகத்தால் சேகரிக்கப்படுகிறது.
இந்த குப்பைகளை முன்பு அருகேவுள்ள சுந்தரநடப்பு கிராமத்தின் அருகே 13.5 ஏக்கர் அளவிலான நிலம் நகராட்சி நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்டு அங்கு பயோ மைனிங் முறையில் அமைக்கப்பட்டு அங்கே குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது.
இந்நிலையில் அந்த குப்பை கிடங்கு முறையாக செயல்படாததன் காரணமாகவும், குப்பைகளை அதிகளவில் தேக்கியதாலும் மழை காலங்களில் அங்கிருந்து கழிவு நீர் வெளியேறி அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு சொந்தமான கண்மாயில் கலந்ததாலும், அக்கிராம மக்கள் இந்த குப்பை கிடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இருந்தபோதும் குப்பை கிடங்கு அகற்றப்படாததால் நீதிமன்றத்தை நாடவே, நீதிமன்றம் அந்த குப்பை கிடங்கு செயல்பட தடைவிதித்தது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவையும் மீறி நகராட்சி நிர்வாகம் லாரி மூலம் குப்பைகளை கொண்டு சென்று கொட்டியதை கண்ட கிராம மக்கள் லாரியை சிறை பிடித்து போராட்டத்தில்,
ஈடுபடவே உடனடியாக ஜே.சி.பி இயந்திரம் வரவழைக்கப்பட்டு குப்பைகளை மீண்டும் லாரியில் ஏற்றி எடுத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.