பேராவூரணியில் போதைப்பொருள் ஒழிப்பு, வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேராவூரணி அருள்மிகு நீலகண்டப் பிள்ளையார் ஆலயத்தில் தொடங்கிய பேரணிக்கு, கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.திருமலைச்சாமி தலைமை வகித்தார். பேராவூரணி பேரூராட்சித் தலைவர் சாந்தி சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி பேருந்து நிலையம், முதன்மைச் சாலை, சேது சாலை வழியாக வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில், சிறப்புரையாற்றிய காவல்துறை ஆய்வாளர் காவேரி சங்கர் பேசுகையில், "ஒவ்வொருவரும் எடுத்து வைக்கும் முதல் அடியும் வெற்றியை தராது. அதுதான் வெற்றிக்கான முதல் படி என்பதை மாணவ, மாணவிகள் உணர வேண்டும். மாணவர்கள் தங்கள் குடும்பம், தங்கள் தெரு, தங்கள் ஊரில் உள்ள பிரச்சனைகளை வெளியே கொண்டு வரும் தைரியம் வேண்டும். சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவோர் குறித்து காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும். உங்கள் ரகசியம் காக்கப்படும். அதற்காக தனித்தனி கட்டணம் இல்லா தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் ஒவ்வொருவருமே காவல்துறையினர் தான். காவல்துறை மட்டுமே குற்றங்களை கட்டுப்படுத்த முடியாது. ஒவ்வொருவருடைய ஒத்துழைப்பும் தேவை. உங்களுடைய ஒத்துழைப்பு இருந்தால்தான் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த முடியும்" என்றார். வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்த போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வட்டாட்சியர் தெய்வானை, தேர்தல் துணை வட்டாட்சியர் யுவராஜ், மண்டல துணை வட்டாட்சியர் தர்மேந்திரா, திமுக நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், வருவாய் ஆய்வாளர்கள் ஜெயதுரை, முருகேசன், யோகச்சந்திரன், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சி.ராணி, இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சுருள் சங்க அலுவலர் நா. பழனிவேல், பேராசிரியர்கள் முத்துகிருஷ்ணன், நித்திய சேகர், தேன்மொழி, அகல்யா, உமா, கஸ்தூரி, சாவித்திரி, அடைக்கலம் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணியில், போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு முழக்கங்கள், வாக்களிப்பதன் அவசியம், கடமை, உரிமை குறித்த முழக்கங்களும் எழுப்பப்பட்டன. தொடர்ந்து, யாருக்கு வாக்களித்தோம் என தெரிந்து கொள்ளும் விவிபேட் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

Tags

Next Story