சிப்காட் எதிர்ப்பு குழுவினர் தடுப்பு அணையில் நின்று ஆர்ப்பாட்டம்

சிப்காட் எதிர்ப்பு குழுவினர் தடுப்பு அணையில் நின்று ஆர்ப்பாட்டம்
நீர் நிலைகளை மறைத்து, சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி, விவசாயிகள் தடுப்பணையில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, வளையப்பட்டி, புதுப்பட்டி, அரூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில், 700 ஏக்கர் பரப்பில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்காக அப்பகுதியில் நிலத்தை அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வலையப்பட்டி கஸ்தூரி மலையில் இருந்து மழை காலங்களில் உருவாகும் காட்டாறு வலையப்பட்டி வழியாக செல்கிறது. இந்த நீரினால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கும் வகையில், வாய்க்காலின் குறுக்கே சுமார் 18 இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், 2 ஏரிகளும் உள்ளன. கஸ்தூரி மலைப்பகுதியில் வலையப்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பஞ்சாயத்துகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான கிணறுகளும் அமைந்துள்ளன. சுப்ரீம் கோர்ட் தீர்ப்புப்படி நீர் நிலைகளை மறைத்து எவ்வித கட்டுமானங்களும் இருக்கக்கூடாது, அப்படி ஏதாவது இருந்தாலும், ஆக்கிரமிப்புகள் இருந்தாலும் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.இந்த நிலையில் இப்பகுதியில் சிப்காட் அமைப்பதற்கான நில வரைபடத்தில், நீர் நிலைகள் உள்ளதை மறைத்து அதிகாரிகள் அரசு அனுமதிக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

எனவே நீர்நிலைகளை மறைத்தும், விவசாய நிலங்களை கையகப்படுத்தியும் சிப்காட் அறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வலையப்பட்டி, புதுப்பட்டி, அரூர், பரளி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள், இன்று (மே- 12) ஞாயிற்றுக்கிழமை கஸ்தூரிமலை தடுப்பு அணை முன்பு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.விவசாயிகள் முன்னேற்ற கழக மாநில பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். சிப்காட் எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர் ரவீந்திரன், சிப்காட் எதிர்ப்பு இயக்க நிர்வாகிகள் பழனிவேல், சரவணன், தண்டபாணி, ரவி உள்ளிட்ட திரளான ஆண்களும், பெண்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story