நாமக்கல் அருகே சிப்காட் எதிர்ப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகாவில் உள்ள, வளையப்பட்டி, பரளி, என். புதுப்பட்டி, அரூர் சுற்றுப்புற பகுதிகளில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக, வருவாய்த்துறை மூலம் நில அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
மோகனூர் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி சிப்காட் எதிர்ப்பு இயக்கம் என்று அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புடன் பல்வேறு அரசியல் கட்சியினரும், விவசாயிகளும் இணைந்து சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஏற்கனவே 51 கட்ட போராட்டங்களை சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் மற்றும் விவசாயிகள் நடத்தியுள்ளனர்.
இதுவரை இது குறித்து தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், அரூர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு இன்று 52வது கட்டமாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்றக்கழக பொது செயலாளர் பாலசுப்ரமணியம் போராட்டத்திற்கு தலைமை வகித்தார். சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் ராம்குமார், ரவிச்சந்திரன், பழனிவேல், கொமதேக சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளான விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு அப்பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி கோஷங்கள் எழுப்பினார்கள்.