ஆண்டிமடம் ரெட்டபள்ளம் அய்யனார் சுவாமி கும்பாபிஷேக திருவிழா
கும்பாபிஷேக விழா
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டம் ரெட்டப்பள்ளம் பகுதியில் பழமையான பூர்ணா, புஷ்கலா, சமேத ஸ்ரீ அய்யனாரப்ப ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்று நீண்ட வருடங்கள் ஆனதால் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய குலதெய்வமாக வழிபடும் முறைதாரர்கள் முடிவு செய்து கும்பாபிஷேகத்திற்கு நாள் குறித்தனர்.
அதனைத் தொடர்ந்து கோவிலின் கோபுரம், விநாயகர், பூர்ணா, புஷ்கலா, சமேத அய்யனாரப்ப ஸ்வாமி, கருப்பண்ணன், வீரபத்திரர், விஷ்ணு, துர்க்கை, கன்னிமார் , சித்தி விநாயகர், பாலமுருகன், ஆகாச வீரன், நாகர் ஆகிய சிலைகளின் பழுது நீக்கப்பட்டு வண்ண வண்ண பூச்சுகள் பூசப்பட்டு கும்பாபிஷேகத்திற்கு கோயில் தயாரானது.
கும்பாபிஷேக யாகசாலை யாக குண்டம் அமைக்கப்பட்டு கோவிலைச் சுற்றி வண்ண வண்ண மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டு கும்பாபிஷேகத்திற்கு தயார் நிலையில் இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை தேவதா அணுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாஜனம், வாஸ்து பூஜை, மஹா கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம், வாஸ்து ஹோமம், பிரவேச பலி நடைபெற்று மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாலை முதல் கால யாக பூஜை தொடங்கியது. எஜமானர்கள் சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் கோமாதா பூஜை, துவார பூஜை, திரவிய ஹோமம், மூல மந்திர ஹோமம் மகா பூர்ணாஹுதி தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜைகள் ஆரம்பம் விசேஷ மூல மந்திர ஹோமம், ஷன்னதி திரவிய ஹோம், மகா பூர்ணாஹுதி தீபாராதனை சுவாமி பிரதிஷ்டை நடைபெற்று மூன்றாம் காலையாக பூஜைகள் ஆரம்பம் வேதபாராயணம், விசேஷமூலம் மந்திர ஹோமம், மகா பூர்ணாகுஹுதி தீப ஆராதனை நடைபெற்றது. கும்பாபிஷேக முக்கிய நிகழ்வான நேற்று காலை நான்காம் கால யாகபூஜைகள் ஆரம்பம் வேத மந்திர ஹோமம், ஷன்னவதி திரவிய ஹோமம், சூர்ய பூஜை, கோ பூஜை, கன்னிகா பூஜை, பிரம்மசார்ய பூஜை,
சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, சுவாமிக்கு ரக்ஷாபந்தனம், நாம கர்ணம், தத்துவார்ச்சனை, நாடி சந்தானம் பூஜைகள் மஹாபூர்ணாஹுதி மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து யாத்ராதானம் யாகசாலையில் இருந்து புனித நீரை சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு எடுத்துச் சென்றனர். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை கோபுர கலசத்திற்கு ஊற்றினர். அங்கு திரளாய் கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு வணங்கினர். அப்பொழுது குடமுழுக்கு குழுவினர் புனித தீர்த்தத்தை பக்தர்கள் மீது தெளித்தனர்.
.அதனைத் தொடர்ந்து மூலவர்கள் மற்றும் பரிவாரங்களுக்கு மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஆண்டிமடம் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள், குலதெய்வமாக வழிபடும் முறைதாரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.