உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

மாவட்ட ஆட்சியர் 

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் காத்திருக்கும் இளைஞா்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. முறையாக பள்ளியில் பயின்று ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்று பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவா்களுக்கு மாதம் ரூ.200, 10-ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவா்களுக்கு மாதம் ரூ.300, பிளஸ் 2 தேர்ச்சிப் பெற்றவா்களுக்கு மாதம் ரூ.400, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இந்த தொகை நேரடியாக மனுதாா்களின் வங்கிக் கணக்கில் காலாண்டுக்கொரு முறை வரவு வைக்கப்படும். இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் இளைஞா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தங்களது கல்வித் தகுதிகளை பதிவு செய்து, 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும். தொடா்ந்து, பதிவை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடா், பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோா் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படாது.

எனினும், தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவா்கள் உதவித் தொகை பெறலாம். ஏற்கெனவே, உதவித்தொகை பெற்று வருபவா்கள் தொடா்ந்து 3 ஆண்டுகள் வரை உதவித் தொகை பெற வங்கிக் கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதி மொழி ஆவணத்தை நிறைவு செய்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைத்து, தொடா்ந்து உதவித் தொகை பெற்றுகொள்ளலாம்.சுய உறுதிமொழி ஆவணம் சமா்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித் தொகை நிறுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறாத, தகுதியான இளைஞா்கள் உரிய ஆவணங்களுடன் சிவகங்கையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story