பேராவூரணியில் வட்டாட்சியருக்கு பாராட்டு விழா
தஞ்சாவூர் மாவட்டம்,பேராவூரணி வட்டாட்சியராக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பொறுப்பேற்ற த.சுகுமார் தமது அர்ப்பணிப்பு மிக்க பணியால் தாலுகாவில் உள்ள, அனைத்து தரப்பு மக்களின் பேரன்பை பெற்றவர். இவருக்கு பணிமாறுதல் என்றவுடன், பணிமாறுதல் செய்யக்கூடாதென நூற்றுக்கணக்கான மக்கள் பேராவூரணி கடைவீதியில் திரண்டு கையெழுத்து இயக்கம் நடத்தினார்கள்.
சுமார் 1500 பேருக்கு மேல் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச வீட்டுமனைப் பட்டா இவரது பணிக்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத சாதாரண ஏழை எளிய மக்களின் பல பிரச்சனைகளை தீர்த்துள்ளதால் இவரது பணியை பாராட்டி பேராவூரணி பகுதி சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
இதில் ஏற்புரையாற்றிய வட்டாட்சியர் த.சுகுமார், "அரசு பணியாளரான தான் மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறுகிறேன். மக்களுக்கான பணிகளை செய்வதும், அவர்களுடைய கோரிக்களை அறிந்து, சட்டத்தின்படி செயல்படுவதும் என்னுடைய பொறுப்பு. அதைத்தான் நான் என் பணிக்காலத்தில் செய்தேன். இனியும் செய்வேன். என் மீது அன்பு காட்டிய உங்கள் அனைவருக்கும் என் நன்றி" என்றார்.