சேலம் மாநகராட்சி சார்பில் டாக்டர், நர்சுகளுக்கு பாராட்டு விழா
பாராட்டு விழாவில் கலந்து கொண்டவர்கள்
சேலம் மாநகராட்சி பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள், நர்சுகளுக்கு பாராட்டு விழா கோட்டை அருகே உள்ள கருணாநிதி மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு ஆணையாளர் பாலச்சந்தர் தலைமை தாங்கினார்.
நகர் நல அலுவலர் யோகானந் வரவேற்றுப்பேசினார். மேயர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு டாக்டர்கள், நர்சுகளுக்கு கேடயம் வழங்கி பாராட்டி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களும் சிறப்பான சேவைகள் வழங்கி வருகின்றன. பிரசவத்தின் போது ஏற்படும் உயிர் இழப்பு இந்தாண்டு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.
முதல்-அமைச்சரின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் 1 லட்சத்து 80 பேருக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளது கண்டறியப்பட்டு அவர்களுக்கு வீடுதேடி சென்று அதற்கான மருந்து, மாத்திரைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
குமாரசாமிபட்டி மற்றும் ரெட்டியூர் ஆகிய 2 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று பெற்று உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.