மாணவ மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் பாராட்டு

மாணவ மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் பாராட்டு

மாணவியை பாராட்டிய காவல்துறை

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மனமகிழ்மன்ற மாணவ, மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

சேலம் மாவட்டம், சங்ககிரி காவல்துறையின் சார்பில் சிறுவர், சிறுமிகளுக்காக நடத்தப்பட்டு வரும் மனமகிழ்மன்றத்தின் சார்பில் தேசிய அளவிலான சிலம்பாட்டம் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் சங்ககிரி காவல் ஆய்வாளரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சங்ககிரி காவல்துறையின் சார்பில் சிறுவர், சிறுமிகளுக்கான மனமகிழ்மன்றம் சேலம் சரக காவல்துறை துணைத்தலைவர் ராஜேஸ்வரி மேற்பார்வையில் செயல்பட்டு வருகின்றது. இம்மன்றத்தின் சார்பில் கேரம், சதுரங்கம், கிரிக்கெட், கோகோ உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளும், தற்காப்பு கலைகளும் கற்றுக்கொடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த தற்காப்பு கலைகளை சங்ககிரி ஆர்.எஸ்., அகத்தியர் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடத்தின் சார்பில் தலைமை பயிற்சியாளர் சுரேஷ், பயிற்சியாளர்கள் தங்கராசு, பிரபு ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். இதில் பயிற்சி பெற்ற ரவீந்திரன், ஹரீஸ், காவியா, மௌனீகா ஆகியோர் பெங்களூரூவில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்டம் போட்டியில் பங்கேற்று முதல் 3 பரிசுகளை பெற்றுள்ளனர்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் சங்ககிரி காவல் ஆய்வாளர் தேவியிடம் சான்றிதழ்கள், கேடயங்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது காவலர் சுரேஷ்குமார், பயிற்சியாளர் மணிகண்டன், சிறுவர், சிறுமிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story