அரசு பேருந்தில் பணம் - ஒப்படைத்த ஓட்டுனர், நடத்துனருக்கு பாராட்டு

அரசு பேருந்தில் தவறவிட்ட பணத்தை உரிய நபரிடம் ஒப்படைத்த ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு பாராட்டு

ஓசூர் அருகே உள்ள சூளகிரி சின்னார் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன் (29). இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். பாதுகாப்பு காரணமாக நிறுவனத்தின் அலுவலகத்தில் இருந்த 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை புருஷோத்தமன் அவரது வீட்டிற்கு நேற்று எடுத்து சென்றுள்ளார். இன்று அந்த பணத்தை அவர் அரசு பேருந்தில் பயணம் செய்து ஓசூரில் உள்ள நிறுவனத்தில் ஒப்படைக்க எடுத்து வந்துள்ளார். ஓசூர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்திலிருந்து இறங்கிய புருஷோத்தமன் பணம் இருந்த பையை பேருந்திலே விட்டு விட்டு மறந்து சென்றுள்ளார். கம்பெனி அருகே சென்ற அவருக்கு பணம் இருந்த பையை பேருந்தில் வைத்து விட்டு வந்துள்ளோம் என்பது நினைவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து அவர் ஓசூர் பேருந்து நிலையத்திற்கு சென்று நேர கட்டுப்பாட்டு அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளிடம் அரசு பேருந்தில் 3.5 லட்சம் ரூபாய் பணம் தவற விட்டதை கூறியுள்ளார். அதே நேரத்தில் ஓசூரில் இருந்து வேலூருக்கு சென்ற அந்த அரசு பேருந்தின் ஓட்டுநர் தவமணி மற்றும் நடத்துனர் தவமணி ஆகிய இருவரும் பேருந்தில் பயணி ஒருவர் தவற விட்ட பையை எடுத்து பார்த்து உள்ளனர். அப்போது அந்த பையில் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் இருந்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவரும் பாதுகாப்பாக அந்த பணத்தை எடுத்து வைத்து தங்களது உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது அதிகாரிகள் ஓசூரை சேர்ந்த ஒருவர் பேருந்தில் பணத்தை தொலைத்து விட்டதாக புகார் தெரிவித்ததை அவர்களிடம் கூறியுள்ளனர். பின்னர் வேலூரில் இருந்து ஓசூர் வந்த நடத்துனர் மற்றும் ஓட்டுனர் ஆகிய இருவரும் தனியார் நிறுவன ஊழியர் தவறவிட்ட பணத்தை அவரிடம் ஒப்படைத்தனர். அரசு பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநரின் நேர்மையை ஓசூர் போக்குவரத்து கிளை மேலாளர் சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள், ஊழியர்கள் பாராட்டினர்.

Tags

Next Story