ஆ.ராசா வேட்பு மனு நிறுத்தி வைப்பு - விசாரணைக்கு பிறகு ஏற்பு

ஆ.ராசா வேட்பு மனு நிறுத்தி வைப்பு - விசாரணைக்கு பிறகு ஏற்பு
X

ஆ.ராசா எம்பி

நீலகிரி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த ஆ.ராசா எம்.பி யின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டு விசாரணைக்கு பின்னர் ஏற்கப்பட்டது.

கடந்த மார்ச் 16ம் தேதி 2024 மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல், வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. மார்ச் 20ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கியது. தி.மு.க., வேட்பாளர் ஆ.ராசா, அ.தி.மு.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச் செல்வன், பா.ஜ.க., வேட்பாளர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயக்குமார் உட்பட 27 பேர் 33 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இதையடுத்து நேற்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் அருணா, தேர்தல் மேற்பார்வையாளர் மற்றும் செலவின பார்வையாளர்கள் முன்னிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்தது. பா.ஜ.க., வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயக்குமார் ஆகியோரது மனுக்கள் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் 100 ரூபாய் பத்திரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தது செல்லாது, 200 பத்திரத்தில் தாக்கல் செய்திருக்க வேண்டும் என பா.ஜ.க., சார்பில் வாதிட்டதால் இவர்களது வேட்பு மனுக்கள் நிறுத்திவைக்கப்பட்டடு கடைசியாக மீண்டும் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இது குறித்து தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., தரப்பினர் கூறுகையில், "சென்னை உயர் நீதிமன்றம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 200 ரூபாய்கான பிரமான பத்திரத்தை வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஏற்றவாறு அந்தந்த மாநிலங்கள் இந்திய பத்திர பதிவு துறையில் சட்ட திருத்தம் செய்யுமாறு உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து கடந்த 2023ம் ஆண்டு தமிழகத்தில் அதற்கான சட்ட முன் வரைவு மட்டுமே இயற்றபட்டது. ஆனால் சட்டம் இயற்றபடவில்லை. எனவே தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 100 ரூபாய் வரையிலான பிரமான பத்திரத்திரத்தை தாக்கல் செய்தாலே போதுமானது என்று விளக்கம் அளித்தனர். இதையடுத்து மாவட்ட தேர்தல் அலுவலர் அருணா தி.மு.க., வேட்பாளர் ஆ.ராசா மற்றும் அ.தி.மு.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோரின் வேட்பு மனுக்களை ஏற்றுக்கொண்டார்.

குறிப்பாக ஆ.ராசா எம்.பி வேட்புமனுவில் தன்னை இந்து என்று குறிப்பிட்டுள்ளார், அவர் இந்து மதத்திற்கு எதிராக எப்போதும் பேசி வருவதால் இந்து மதத்தின் கீழ் வரும் சலுகைகள் அவர் அனுபவிக்க உரிமை கிடையாது எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பா.ஜ.க., வினர் கூறினார். ஆனால் தேர்தல் நடத்தும் அலுவலர் இந்த கோரிக்கையை நிராகரித்து விட்டார். இறுதியாக தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜக., நாம் தமிழர் ஆகிய முக்கிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் உட்பட 16 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. முறையாக ஆவணங்கள் இல்லாததால் 17 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இரண்டு பெரிய கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிறுத்திவைக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story