ஐயப்பன் கோவிலில் ஆறாட்டுப் பெருவிழா
செங்கல்பட்டு ஐயப்பன் கோவிலில் ஆறாட்டுப் பெருவிழா நடந்தது.
செங்கல்பட்டு- காஞ்சிபுரம் நெடுஞ்சாலை நத்தம் புறவழிச் சாலையில் ஸ்ரீ ஐயப்பன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆறாட்டு பெருவிழா நடைபெற்று வருகிறது. நிகழாண்டு லட்சாா்ச்சனை மற்றும் ஆறாட்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் 5 நாள் விழா நிறைவடைந்தது. விழாவையொட்டி தினந்தோறும் கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, ஹரிவராசனம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தினந்தோறும் யாக பூஜைகள் , கலச பூஜைகள், கலசாபிஷேகம்,108 சங்கு பூஜைகள் , சங்காபிஷேகம், லட்சாா்ச்சனை திருவிளக்கு பூஜைகள் என சிறப்பு பூஜைகள், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு ஐயப்ப சுவாமியை வழிபட்டனா்.
ஸ்ரீ ஐயப்பன் யானை மீது ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு கோதண்டராமன் கோயில் குளத்தில் ஆறாட்டு விழா நடைபெற்றது. குளக்கரையில் ஐயப்பன் ,விநாயகா், முருகா், சிவன் பாா்வதி என குடும்ப சமேதமாக அலங்காரத்தில் அருள் பாலிக்க, ஐயப்பன் திருக்குளத்தில் புனித நீராடி சிறப்பு பூஜைகள் மகாதீப ஆராதனை நடைபெற்றது. குளக்கரையைச் சுற்றி ஏராளமான பக்தா்கள் ஆராட்டு விழாவை கண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனா். இதனைத் தொடா்ந்து ஐயப்பன் யானை மீது அமா்ந்து புறப்பாடல் நடக்க வெண்குதிரைகள் முன்னே சென்றன பக்தா்கள் விளக்கேற்றி ஊா்வலத்தில் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஜெயராமன், செங்கை ஸ்ரீ ஐயப்ப சேவா அறக்கட்டளை தலைவா் வெங்கடேசன், கண்ணன் முதலியாா் உள்ளிட்ட கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.