மாமல்லபுரம் அருகே பழங்கால கோவிலை புனரமைக்கும் தொல்லியல்துறையினர்

மாமல்லபுரம் அருகே பழங்கால கோவிலை புனரமைக்கும் தொல்லியல்துறையினர்

 மல்லபுரம் அருகே சாலவான்குப்பத்திலுள்ல பழங்கால கோவிலை புனரமைக்கும் பணியில் தொல்லியல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மாமல்லபுரம் அருகே சாலவான்குப்பத்திலுள்ல பழங்கால கோவிலை புனரமைக்கும் பணியில் தொல்லியல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம்,மாமல்லபுரம் அடுத்த சாலவான்குப்பம் பகுதியில், 'புலிக்குகை' என்றழைக்கப்படும், 'அதிரணசண்ட' குடைவரை சிற்பங்கள் உள்ளன. தொல்லியல் துறை பராமரித்து பாதுகாக்கிறது. இவ்வளாகத்தை ஒட்டிய வடபுறத்தில், நீண்டகாலமாக மணல்மேடு, சிறிய பாறைக்குன்றின் உச்சிப் பகுதி காணப்பட்டது.

இப்பகுதி, கடற்கரையை ஒட்டியுள்ள நிலையில், கடந்த 2004 டிசம்பரில், சுனாமி அலை நிலப்பகுதியில் உட்புகுந்தபோது, மணல்மேடு அரிக்கப்பட்டு, நிலத்தடியில் சிதைந்த நிலையில் செங்கற்களால் கட்டப்பட்ட பழங்கால கோவில் தெரிந்தது. பாறைக்குன்றும் முழுதாக வெளிப்பட்டது. தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, பல்லவர் ஆட்சிக் காலத்திற்கும் முன்பே, இங்கு முருகன் கோவில் கட்டப்பட்டதை அறிந்தனர். அதன்மீதே, பல்லவர், சோழர் ஆகியோர், பாறைக்கற்களில் கட்டமைத்து புனரமைத்தது குறித்தும் அறிந்தனர். இக்கோவில் குறித்து, பாறைக்குன்றிலும் கல்வெட்டு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. கோவிலுக்கு நிலம் தானம் வழங்கியது குறித்து, கன்னர தேவர், பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன், முதலாம் ராஜராஜசோழன் உள்ளிட்டோரின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கீரைப்பிரியனின் நன்கொடை, வசந்தனாரின் தீபமேற்றுதல் உள்ளிட்டவற்றுக்காக, பொற்கழஞ்சு காசுகள் அளிக்கப்பட்டது உள்ளிட்ட தகவல்கள், துாண்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்காலத்தில், இவ்வூர் 'திருவிழிச்சில்' என அழைக்கப்பட்டுள்ளது. பல்லவர் பாறைக்கற்களில் கோவில் கட்டும் நுட்பத்தை கண்டறியும் முன், பழங்காலத்தில் தமிழகத்தில் செங்கற்களில் கோவில்கள் கட்டுவதே நடைமுறையில் இருந்துள்ளது. இக்கோவிலில் கல்லில் வடிக்கப்பட்ட வேல், சேவல் உள்ளிட்டவற்றால், இக்கோவில் முருகன் கோவில் என்பதை, தொல்லியல் துறையினர் உறுதிப்படுத்தினர். தமிழகத்தில், முருகனுக்கு கட்டப்பட்ட முதல் கோவிலாக, இக்கோவில் இருக்கலாம் என, தொல்லியல் துறையினர் கருதுகின்றனர். நாளடைவில், கடல் நெருங்கிய சூழலில், கோவில் சேதமடைந்து மணல் மூடியதாக தெரிவிக்கின்றனர். சிதைவுற்ற கோவில், 10 அடி ஆழத்திற்கும் கீழ் உள்ளதால், பழங்கால நிலமட்டம், தற்போது உள்ள மட்டத்திலிருந்து மிகவும் கீழே இருந்திருக்கலாம் என, தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். மாமல்லபுரத்திற்கு வடக்கில், 4 கி.மீ., தொலைவில், இக்கோவில் உள்ளது. முற்றிலும் சிதைவுற்ற நிலையில் கண்டறியப்பட்டுள்ள இக்கோவில், மீண்டும் புதிதாக கட்ட இயலாததாக உள்ளது.

அதே நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக, தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது. 'புலிக்குகை' சிற்பத்தை காண வரும் சுற்றுலா பயணியர், அவ்வளாகத்திலிருந்து சென்று, இந்த பழங்கால கோவிலையும் காணும் வகையில், கற்களால் பாதை அமைக்கப்பட்டுள்ளது. திறந்தவெளியில் கோவில் சிதைவுகள் இருப்பதால், வெயில், மழையில் பாதிக்கப்பட்டு, கற்கள் பிணைப்பு படிப்படியாக சேதமடைந்து, கற்கள் உதிர்ந்து வருகின்றன. இப்பாதிப்பை தவிர்த்து, மேலும் சிதைவதை தடுக்கும் வகையில், பழங்கால தன்மை மாறாமல் புனரமைக்கும் பணிகளை தொல்லியல் துறையினர் செய்து வருகின்றனர். பழங்கால முறையில், சுண்ணாம்பு, மணல், கடுக்காய், வெல்லம் உள்ளிட்டவற்றை அரைத்து, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கலவையை பயன்படுத்தி, கற்கள் பிணைப்பு பகுதியில் புனரமைப்பு பணி நடந்து வருகிறது.

இதுகுறித்து, தொல்லியல் துறையின் மாமல்லபுரம் பராமரிப்பு அலுவலர் ஸ்ரீதர் கூறியதாவது: இக்கோவில் முழுமையாக சிதைவடைந்து உள்ளது. மீண்டும் கட்டுவதற்கான நிலையில் இல்லை. தற்போது உள்ளதும், கடற்காற்று, வெயில், மழை ஆகியவற்றால், கற்கள் அரிக்கப்பட்டு உதிர்கின்றன. அதைத் தவிர்க்க, புதிய கலவை நிரப்பி புனரமைத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story