பேருந்து ஓட்டுநர்களிடையே வாக்குவாதம் - பயணிகள் அவதி
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் இடையே பேருந்து நேரம் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் குழந்தைகளுடன் பேருந்து கிடைக்காமல் இரவு நேரத்தில் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர். இந்த பிரச்சினை அனைத்து பேருந்து நிலையத்திலும் நடைபெறுகிறது.
அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தையும், பேருந்து நிறுத்தத்தையும் முறையாக கடைபிடித்தால் இது போன்று பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கலாம் எனவும், மேலும் ஓட்டுனர்களும் நிதானமாக பேருந்தை ஓட்டி சென்று உரிய நேரத்தில் பயணிகளை நிறுத்தத்தில் இறக்கிவிடலாம் எனவும், தேவையற்ற விபத்து மற்றும் அசம்பாவிதங்கள் நடைபெறாமலும் தடுக்கலாம் எனவும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும் பேருந்து நிலையத்தில் இரு பேருந்துகளின் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் தகாத வார்த்தைகளை பேசி அநாகரீமாக நடந்து கொண்டது பயணிகளை முகம் சுளிக்க வைத்துள்ளது. பின்னர் காங்கேயம் காவல்துறையினர் தகவல் தெரிவிக்கப்பட்டு பேருந்து நிலையத்திற்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தி கலந்துசெல்ல அறிவுறுத்தினார். இதனால் இரு பேருந்துகளும் சுமார் 1 மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது.