அரியலூர் : போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
விழிப்புணர்வு பிரச்சாரம்
அரியலூர் ரயில் நிலையத்தில், ரயில்வே காவல் நிலையம் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் நேற்று வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அரியலூர் ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமை வகித்து, போதைப்பொருள் பழக்கம் உடல் நலத்திற்கும், சமூக நலத்திற்கும் பெரும் கேடு விளைவிக்க கூடியது. எனவே, மது, புகையிலை, பான்மசாலா உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருள் பழக்கத்தை கைவிட வேண்டும். செல்போன் பயன்படுத்திக் கொண்டு தண்டவாளத்தை கடப்பதை தவிர்க்க வேண்டும். தண்டவாள பாதையில் குழந்தைகள் விளையாடுவது அனுமதிக்க கூடாது. ஓடும் ரயிலில் ஏறவோ இறங்கவோ வேண்டாம். ரயில் பயணத்தின் போது அந்நிய நபர்கள் கொடுக்கும் உணவு பொருட்களை அருந்தக்கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதையடுத்து காரைக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் போதை பழக்கத்தால் உண்டாகும் பாதிப்புகள் மற்றும் ரயில் பயணத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை போலீஸார் வழங்கினர். நிகழ்ச்சியில், அரியலூர் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் கே. பழனிச்சாமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கார்த்திக், ரயில்வே பாதுகாப்பு படை உதவி காவல் ஆய்வாளர் சிவகுமார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் கலந்து கொண்டனர்.