காட்டுத் தீயை கட்டுப்படுத்த ராணுவ ஹெலிகாப்டர்!
காட்டுத் தீ
ராணுவ ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி நீலகிரி வனக்கோட்டம், குன்னூர் சரகம், ஃபாரஸ்ட் டேல் குடியிருப்புக்கு அருகில் இருக்கும் தேயிலை தோட்டத்தில் கவாத்து பணிகள் நடந்தது. அதில் கவாத்து செய்யப்பட்ட தேயிலை மலாரை தோட்டத்தின் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் எரித்தனர். இதன் காரணமாக அருகில் இருந்த பிளாக் பிரிட்ஜ்காப்புக்காட்டிற்குள் தீ மளமளவென பரவியது. காப்புக்காடு முழுவதும் சாம்பிராணி மரம் இருப்பதால் தீ வெகு விரைவாக மலையின் மேல்பகுதி வரை பரவியது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் உடனடியாக நீலகிரி வனக் கோட்ட வனப்பணியாளர்கள் ஈடுபட்டபோதிலும் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக சுமார் 100 வனப்பணியாளர்கள் கோவை, கூடலூர் மற்றும் நீலகிரியின் இதர வனக் கோட்டத்தில் இருந்து விரைந்து வந்து உள்ளுர் மக்களின் ஒத்துழைப்போடு காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். வனத்தில் உள்ள காய்ந்த சாம்பிராணி மரங்கள் மற்றும் உதிர்ந்த தழைகள் காட்டின் தரைப் பகுதியில் அதிகம் இருப்பதால் இந்த தீயை கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவியது. இன்று, மார்ச் 16ம் தேதி, சூலூர் விமான தளத்தில் உள்ள இந்திய விமானப்படையின் ஆதரவுடன், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வன அலுவலரின் மேற்பார்வையில், ஹெலிகாப்டர் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சிகள் நடந்தன. பிற்பகல் 2 மணி முதல், நான்கு முறை அருகிலுள்ள நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீரை எடுத்து தீப்பிடித்த பகுதிகளில் தெளிக்கப்பட்டன. இருப்பினும் தீ அணைக்கப்படாமல் உள்ளதால் தொடர்ந்து முயற்சிகள மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Next Story