டெலஸ்கோப் வழியாக ஒரே நேர்கோட்டில் ஆறு கிரகங்களை காண்பதற்கு ஏற்பாடு!
வியாழன் , சனி உட்பட 6 கிரகங்களை ஒரே நேர்கோட்டில் காணக்கூடிய வாய்ப்பு ஜூன் முதல் வாரத்தில் இருந்து மக்களுக்கு கிடைக்கும் என வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். ஜூன் 3ஆம் தேதி முதல் சூரிய உதயத்திற்கு முன்பாக இதனை துல்லியமாக பார்க்க இயலும் என்றும் தெரிவித்திருந்தனர். இதனை காண பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். புதன் , செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய 4 கோள்களை வெறும் கண்களால் பார்க்க முடியும். யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய இரண்டு கோள்களை டெலஸ்கோப்பி உதவியுடன் மட்டுமே பார்க்க முடியும் என தெரிவித்திருந்தனர்.
அந்த வகையில் திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் டெலஸ்கோப்பி வழியாக ஒரே நேர்கோட்டில் 6 கிரகங்களை காணக்கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதனை காண நேற்று அதிகாலை 4 மணி முதல் மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்வத்துடன் காத்திருந்தனர். மேக மூட்டத்தின் காரணமாக சனி கோள் மட்டுமே வெறும் கண்களால் காண முடிந்தது. டெலஸ்கோப்பில் காணும்போது வளையங்களுடன் அற்புதமான தோற்றத்தில் காண முடிந்தது. செவ்வாய் மற்றும் சந்திரனை டெலஸ்கோப்பின் மூலம் காண முடிந்த நிலையில் மற்ற கிரகங்கள் மேகமூட்டத்தின் காரணமாக காண முடியவில்லை.
இந்த நிகழ்வு குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நிர்வாகி ஈஸ்வரன் தெரிவித்த போது , மேகமூட்டத்தின் காரணமாக வானிலை மையம் தெரிவித்தது போன்ற நிகழ்வினை காண முடியவில்லை. இருப்பினும் 2 கோள்களை டெலஸ்கோப்பின் மூலமாக மாணவர்களும் பெற்றோர்களும் கண்டுகளித்தனர். வரும் நாட்களில் மேகமூட்டம் குறையும் பட்சத்தில் ஒரே நேர்கோட்டில் இல்லை என்றாலும் 6 கோள்களையும் காணக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தார்.