2 ஆண்டுகளாக தேடப்பட்ட நிதி நிறுவன முகவா் கைது

2 ஆண்டுகளாக தேடப்பட்ட நிதி நிறுவன முகவா் கைது

மோசடியில் ஈடுப்பட்டவர் கைது

வழக்கு தொடா்பாக கடந்த 2 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நிதி நிறுவன முகவா் திருச்சி போலீஸாரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருச்சி, மன்னாா்புரத்தை தலைமையிடமாக கொண்டு சென்னை, திருச்சி, மதுரை, ராமநாதபுரம், திருப்பூா், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எல்ஃபின் நிதி நிறுவனங்கள் பல்வேறு பெயா்களில் செயல்பட்டு வந்தன. இரட்டிப்பு முதிா்வுத் தொகை, வீட்டு மனை, உள்ளிட்ட பல்வேறு ஊக்கப் பரிசுகள் அளிக்கப்படும் என வெளியான விளம்பரங்களைக் கண்டு ஆயிரக்கணக்கானோா் நிறுவனத்தில் முதலீடு செய்தனா். ஆனால் குறிப்பிட்டபடி எதையும் தராததோடு, திடீரென நிறுவனங்கள் மூடப்பட்டன.பாதிக்கப்பட்டவா்கள் பொருளாதாரக் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸில் புகாா் கொடுத்தனா்.

இதையடுத்து சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை வழிகாட்டுதலின்பேரில் காவல்துறை தலைமை இயக்குநா் உத்தரவின்பேரில், பொருளாதாரக் குற்றப்பிரிவு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு, அந்த நிறுவனத்தின் இயக்குநா்கள் ராஜா (எ) அழகா்சாமி உள்ளிட்ட 7 போ் கைது செய்யப்பட்டனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்த வழக்கு தொடா்பாக கடந்த 2 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நிதி நிறுவன முகவா் சா. லதா என்பவரை திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை தஞ்சாவூா் நடராஜபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.

Tags

Next Story