நிதி நிறுவன ஊழியர்களிடம் ரூ.12 லட்சம் பறித்த 4 பேர் கைது
பைல் படம்
சேலம் அருகே உள்ள அயோத்தியாப்பட்டணத்தை சேந்தவர் யுவராஜ். இவர் அம்மாபேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் நிதி நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் ஊழியராக ஆத்தூர் நாவக்குறிச்சியை சேர்ந்த குமார் வேலை பார்த்து வருகிறார். கடந்த 14-ந்தேதி 2 பேரும் நிதி நிறுவன தொகை ரூ.12 லட்சத்து 9 ஆயிரத்தை மாசிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு வங்கியில் டெபாசிட் செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். உடையாப்பட்டி பகுதியில் சென்ற போது இவர்களது பின்னால் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் வழிமறித்து ரூ.12 லட்சத்து 9 ஆயிரத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் உதவி கமிஷனர் செல்வம், இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஆகியோர் கொண்ட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் பல்வேறு இடங்களில் கொள்ளையர்களை தேடி வந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கெங்கவல்லி பகுதியை சேர்ந்த 4 பேர் இந்த கொள்ளையை அரங்கேற்றி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று கெங்கவல்லி அருகே உள்ள செந்தாரப்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கஜேந்திரன் (வயது 23), அதே பகுதியை சேர்ந்த ராமு மகன் விக்னேஷ் (32), ரவி மகன் புவனேஸ்வரன் (31), சந்திரகுமார் மகன் சுபாஷ் (22) ஆகிய 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் பணம் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் ரூ.3 லட்சம், 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.