ரேஷன் அரிசியை பதுக்கியவா் கைது - 1 டன் அரிசி பறிமுதல்

ரேஷன் அரிசியை பதுக்கியவா் கைது - 1 டன் அரிசி பறிமுதல்

கைது 

திருச்சியில் நியாயவிலைக் கடை விநியோக அரிசியை பதுக்கி வைத்து கால்நடை தீவனங்கள் தயாரிக்க விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து சுமாா் 1,000 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸாா், ரேசன் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசியை முறையற்ற வகையில் விற்பனை செய்வோா் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனா். திருச்சி மண்டலத்தில் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளா் சுஜாதா உத்தரவின்பேரில், திருச்சி காவல் ஆய்வாளா் மணி மனோகரன் தலைமையில் உதவி ஆய்வாளா் கண்ணதாசன் மற்றும் போலீஸாா் எடமலைப்பட்டி புதூா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது ரெட்டமலை அருகே உள்ள கோரையாற்று கரையில் சிலா் ரேசன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா். இதில் சுமாா் 1000 கிலோ ரேசன் அரிசி மூட்டைகள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இது தொடா்பாக விசாரணை மேற்கொண்டதில், திருச்சி, காந்திமாா்க்கெட் அருகேயுள்ள தாராநல்லூரைச் சோ்ந்த சதிஸ்குமாா் (32) என்ற நபா், ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி பதுக்கி வைத்து, அவற்றை கால்நடை தீவனம் தயாரிப்புக்காக அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸாா் சதிஸ்குமாரை கைது செய்து அவரிடமிருந்து சுமாா் 1000 கிலோ அரிசியைப் பறிமுதல் செய்துள்ளனா்.

Tags

Next Story