சென்னை காவல் ஆணையராக அருண் நியமனம்!!

சென்னை காவல் ஆணையராக அருண் நியமனம்!!

Chennai Commissioner Arun

சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை போலீஸ் கமிஷனராக சந்தீப் ராய் ரத்தோர் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவர் தமிழ்நாடு காவலர் பயிற்சி அகாடமியின் டி.ஜி.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். தமிழ்நாடு காவலர் பயிற்சி அகாடமியின் கூடுதல் டி.ஜி.பி.யாக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ளார். புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள அருண் இதற்கு முன்பு சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்தார். அவர் ஏற்கனவே பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர், கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, டி.ஐ.ஜி, ஐ.ஜி. ஆகிய பொறுப்புகளிலும் பணியாற்றியுள்ளார். தற்போது சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந்தேதி சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது படுகொலைக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் சென்னையில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று கூறினார்கள். உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்றும் விமர்சனம் செய்தனர். ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதியும் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று குற்றம் சாட்டினார். இதில் உண்மை குற்றவாளிகளை கைது செய்வதுடன் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறினார். இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் திடீரென்று பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய போலீஸ் கமிஷனராக அருண் நியமிக்கப்பட்டு உள்ளார்.

Tags

Next Story