வளர்ந்த மாநிலம் என்பதால் நிதி ஒதுக்கீடு குறைவு: வேலு
பொதுக்கூட்டம்
காஞ்சிபுரத்தில், தி.மு.க., சார்பில், 'உரிமையை மீட்க ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில், பொதுக்கூட்டம்
காஞ்சிபுரத்தில், தி.மு.க., சார்பில், 'உரிமையை மீட்க ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. இதில், அமைச்சர்கள் வேலு, அன்பரசன், தி.மு.க., - எம்.பி., செல்வம், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர், எழிலரசன், வரலட்சுமி மற்றும் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் அமைச்சர் வேலு பேசியதாவது: ஒருவனுக்கு பண்புகளையும், பொருளாதாரத்தையும் உயர்த்துவது கல்வி. மாநில பட்டியலில் இருந்த கல்வி, பொதுப்பட்டியலுக்கு போனது. 'நீட்' தேர்வு தமிழகத்திற்கு ஒத்து வராது என, முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வராக இருந்த வரை எதிர்த்தார். 'இபிஎஸ் - ஓபிஎஸ்' என இருவரும் வந்தார்கள்; நீட் தேர்வு வந்துவிட்டது. ஹோட்டல்களுக்கு 'வாட்' வரியை ஏற்றியதற்காக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். உணவு விலை ஏற்றுவோம் என்றார்கள். இந்த விஷயத்தை அப்போதைய முதல்வர்கருணாநிதியிடம் கொண்டு சென்றபோது, 12 சதவீத வாட் வரியை ரத்து செய்தார். வரி விதிக்கும் உரிமை மாநில அரசுக்கு இருந்தது. இப்போதெல்லாம் ஜி.எஸ்.டி., வரி எப்போது வேண்டுமானாலும் ஏறுகிறது. தமிழகம் வளர்ந்த மாநிலம் எனக் கூறி, நமக்கான நிதி ஒதுக்கீடு மிகக் குறைவாக வழங்கப்படுகிறது. ஆனால், உத்தர பிரதேம், மத்திய பிரதேசம், பீஹார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு, பல மடங்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்."
Next Story